பக்கம்:கம்பன் கலை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ) கம்பன் கலை அதே பிழையைச் செய்த சுக்கிரீவன் உயிரை இழக்காததுடன் அந்த இராமனுடன் தம்பி முறையுங் கொண்டாடினான் என்பது எவ்வளவு பொருத்தமற்றது. எனவே, கம்பநாடன் தான் காட்டும் சமுதாய அறத்தில் இத்தகைய ஒரு முரண்பாடு தோன்றுவதை விரும்பவில்லை. மூலநூலில் இஃது இவ்வாறே இருப்பினும் தாம் இதனை மேற்கொள்ள இயலாது என்ற முடிவுக்கு வருகின்றான் கவிஞன். தனி மனிதன் தன் அறத்தினின்று வழுவினால் அதனால் துன்பமடைபவன் அவன் ஒருவன் மட்டுமே யாவன். ஆனால், சமுதாய அறத்தில் ஒருவன் வழுவினால் அதனால் சமுதாயம் முழுவதற்குமன்றோ தீங்கு நேரும்; ஆதலால், இப்பெரிய் தவற்றை அதாவது ஒரு தவற்றை இராவணன் செய்து உயிரை இழந்தான்; ஆனால், அதே தவற்றைச் சுக்கிரீவன் செய்து துன்பம் அடைய வில்லை. இப்படி ஒரு பெரிய தவற்றை, அறம் போதிக்கும் தன்னுடைய நூலுள் நுழையவிடவில்லை கம்பநாடன். மூல நூலுடன் மாறுபடவேண்டுமே என்றுகூடக் கவலைப்படாமல் கதையையே மாற்றிவிடுகின்றான் கவிஞன். கம்பநாடனுடைய தாரை, வாலி இறந்தவுடன் விதவைக் கோலம் பூண்டு வாழ்கின்றாள். சுக்கிரீவன் குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டு வாழ்பவனாக இருந்துங்கூடத் தாரையை விரும்பும் இழிகுணம் படைத்தவனாக இருக்கவில்லை. பிறன் மனைவியை நயத்தல் பெரும் பிழை என்ற பெரிய அறம் இராமாயணம் முழுவதும் இலங்கக் காண்கிறோம். இந்த அறத்தை மேற்கொள்ளாமல் மாறுபட்டவன் இராவணன் ஒருவனே. அவனும் அதற்குத் தண்டனையை அனுபவித்து விடுகின்றான். கம்பநாடன் தன்னுடைய பெரிய நூலுள் பல்வேறு வகைப்பட்ட அறங்களைப் பேசுகின்றான் என்பதும், அவை தம்முள் மாறுபடாமல் யாவர்க்கும் ஒப்பவே பேசப்படுகின்றன என்பதும் நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/100&oldid=770608" இலிருந்து மீள்விக்கப்பட்டது