பக்கம்:கம்பன் கலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 93 அடக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொஞ்சம் நன்கு ஆராயவேண்டும். அடக்கம் வேறு இன்மை வேறு, பொருள் உள்ளே அடங்கியிருக்கிறதென்றால் அது இருக்கவேண்டிய எல்லையிலே இருக்கிறது என்பதுதான் பொருளே தவிர, தன்னுடைய எல்லையை விட்டு வெளிவரவில்லை என்பதுதானே பொருளே தவிர, இல்லாமற் போய்விட்டது என்ற கருத்தே அன்று. இந்த உண்மையை விளங்கிக்கொண்டாலொழிய இந்தத் தமிழன் கண்ட புலன் அடக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளுதல் இயலாத காரியம். புலன் அடக்கம் என்றால் பொறி புலன்கள் தாங்கள் இருக்க வேண்டிய எல்லையைவிட்டு அப்பாற் செல்லக் கூடாது என்பதுதான் கருத்து. உதாரணமாகக் காணவேண்டுமேயானால், கண்கள் காணப் படைக்கப்பட்டன. காட்சியாகிய புலன் கண்ணாகிய பொறிக்கு உரியது. அப்படியானால், பார்ப்பதற்கென்று படைக்கப்பட்ட கண்ணை வைத்துக்கொண்டு பார்க்காதே என்று சொல்லுவது பொருத்தமுடையதா? நிச்சயமாக இல்லை. பின்னர் என்ன செய்யவேண்டும்? பார்த்தல் நன்றாக வேண்டும்; அவசியம் பார்த்தல் வேண்டும். கண்ணாகிய பொறியை மூடிக்கொண்டு பயன்படுத்தாமல் இருக்கவேண்டா. திறந்தே இருக்கட்டும். திறந்து இருக்கட்டும் என்று சொன்னவுடனே, அடுத்து வரும் கேள்வி என்ன பயனைக் கருதி என்பதாகும். பார்ப்பதாகிய பயனைக் கருதி என்ற விடையும் உடன் கிடைத்துவிடும். கண்ணைத் திறந்துபார் என்பதில் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் கொள்ளவில்லை நம்முடைய பெரியவர்கள். ஆனால், கண்ணைத் திறந்து எதனைப் பார்ப்பது எனபதிலேதான் கருத்து வேறுபாடு கொண்டார்கள். இராமகிருஷ்ணருடைய அழகான கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. துறவி யொருவன் புதிதாகத் தவம் செய்யவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/103&oldid=1396745" இலிருந்து மீள்விக்கப்பட்டது