பக்கம்:கம்பன் கலை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ம் கம்பன் கலை கம்பனுடைய அந்தப் பெருங் காப்பியத்தில் புலன் அடக்கம் செய்தவர்கள் ஒருபுறம் காட்சி அளிக்கின்றார்கள். புலன் அடக்கம் செய்யாதவர்களும் ஒருபுறம் காட்சி அளிக்கின்றார்கள். அதில் ஒரு தனிச் சிறப்பும் இருக்கிறது. அடக்கம் உடையவர்கள், அடக்கம் இல்லாதவர்கள் என்ற இரண்டு பிரிவாகக் கலைஞன் பிரித்தானே தவிர, இரண்டு. பேரும் ஒரே தரத்தில் உள்ள மக்கள்தாம். முழுமுதற் பொருளை எடுத்துக்கொண்டு, அவன் புலன் அடக்கம் உடையான் என்றால், அதில் ஒன்றும் வியப்பில்லை. முழுமுதற் பொருள், புலன்களிலிருந்து இயல்பாகவே நீங்கினவன் என்று பரிமேலழகர் அழகாகச் சொல்லுவார். நம்மைப்போல ஐந்தையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறவர்களைப் பாத்திரங்களாக்கிக் கவிஞன் அதில் ஒரு சிலரை அடக்கியவர்கள் என்றும், ஒரு சிலரை அடக்காதவர்கள் என்றும் பிரிக்கின்றான். அடக்கியவர் களுக்கும் அடக்காதவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை மிக அழகாக அடுத்தடுத்து வைத்துக் காட்டுகிறான். அங்கேதான் ஒர் உண்மையை நாம் அறியமுடிகிறது. ஐந்து பொறிகளையும் ஒருசேர அடக்கிவிட்டால் பயன் ஏற்படுமா? இந்த நாட்டவர்கள் என்ன சொன்னார்கள்? ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயன் இன்றே என்றார் வள்ளுவர். ஐந்து பொறி புலன்களையும் உறுதியாக முற்றிலும் அடக்கிவிட்டாலும் பயனில்லை என்கிறார் பொதுமறை தந்தவர் என்ன? பொறி புலன்களை ஒரளவு அடக்கவேண்டுமென்று சொல்லுகின்ற நாட்டிலே, வள்ளுவரா இப்படிச் சொல்லுகிறார்? ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயன் இன்றே என்று சொல்லிவிட்டாரே யென்றால், அது பெரிய உண்மை. இந்த ஐந்து உணர்வு களையும் அப்படியே அடக்கிவிட்டால், மோட்சம் போக முடியும் என்று வைத்துக்கொள்ளுவோமேயானால், பல பொருள்கள் மோட்சத்துக்குப் போட்டிபோடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/106&oldid=770614" இலிருந்து மீள்விக்கப்பட்டது