பக்கம்:கம்பன் கலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ல் கம்பன் கலை தொல்லைதான் இருக்கிறது. பொருளை வைத்துக்கொண்டு புலனடக்கம் செய்கிறேன் என்று ஆரம்பித்தாயேயானால், கொல்லாவிரதி ஒருவன் நான் கையிலே மட்டும் ஒரு கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்வதுபோல என்று கூறுகிறார் கொலை மறுத்தல் ஆசிரியராகிய சாந்தலிங்க அடிகளார். அந்த வாளை வைத்துக் கொண்டிருந்தால், இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது என்ற முதுமொழிப்படி ஏதாவது தொல்லை விளையும். கத்தி எடுத்தவன் சும்மா இருப்பதில்லை. அது போலப் பொருளை வைத்துக்கொண்டு இருப்பவன் புலனடக்கம் செய்யமுடியாது என்று கருதினார்கள். அதுவும் ஒருவகையில் உண்மைதான். ஆனால், எவனொருவன் பொருளையும் வைத்துக்கொண்டு அதன் மேலும் புலன் அடக்கம் செய்துவிட்டானோ அவன் மாந்தருள் தலைவனாக விளங்குகின்றான். பரதன் எதிரே அரசியல் செல்வம் இருக்கின்றது; மனைவி எதிரே இருக்கின்றாள்; எல்லாவிதமான போக போக்கியங்களும் இருக்கின்றன. என்னுடைய அண்ணன் அங்கே அடகு, கனி முதலியவற்றை உண்டு காட்டில் வாழ, யான்மட்டும் வெண்சோறு உண்பேனா என்று பரதன் கருதுகிறான். அதுதான் உண்மையான புலனடக்கம். ஒன்றும் கிடைக்காத காட்டில் வாழ்ந்த இலக்குவனுடைய புலனடக்கத்தைக் காட்டிலும் அனைத்தையும் எதிரே வைத்துக்கொண்டு தொடமாட்டேன் என்று வாழ்கின்ற அந்தப் பரதனுடைய புலனடக்கத்தை நினைக்கும் பொழுது கம்பனுடய சொல்நயம் தெரிகிறது. இந்திரியங்களை அவித்து வாழ்வது இதுதான் என அறிகிறோம். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை. யாண்டும் அஃது ஒப்பது இல் என்று வள்ளுவன் கூறிய பேருண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றதாக அமைகின்றது. பரதனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/120&oldid=770630" இலிருந்து மீள்விக்கப்பட்டது