பக்கம்:கம்பன் கலை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 111 புலனடக்கம். அப்படிப் புலனடக்கம் செய்வதற்கு அடிப்படை எது என்பதைக் கம்பன் இரண்டாவது வரியிலே வைத்துக் காட்டுகின்றான். புலனடக்கம் செய்யப் போகின்றவன் எப்படித் தொடங்குவது? கண்ணை, காதை மூடிக்கொண்டு இருக்கிறேன் என்பது நடவாத காரியம். அப்படியானால், என்ன செய்யவேண்டும்? இந்தப் பொறி புலன்களை அவற்றின் விருப்பப்படி ஒடவிடாமல் நாமே ஒரு வழியில் செலுத்த வேண்டும். சும்மா இரு என்றால், இந்த மனம் ஒரு பேய்க் குரங்கு ஆகலின் அது தாவிக் கொண்டேதான் இருக்கும். எதை நினைக்க வேண்டா என்று சொல்கிறோமே அதை நினைத்துக் கொண்டேதான் இருக்கும். ஏன்? மனத்தின் வேலை நின்னத்தல்; கண்ணின் வேலை பார்த்தல்; காதின் வேலை கேட்டல்; பாராமல், கேளாமல் இரு என்றால் அவை இரா. வேறு வழி என்ன? மறுபக்கம் செலுத்துவதுதான் அந்த வழி. 'ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் என்று திருமூலரில் தொடங்கினோமே, அவரும் இக் கருத்தைத்தான் கூறுகிறார். ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை! கண்ணை வைத்துக்கொண்டு காணாமல் இருக்க முடியாது. அப்படியானால் அழியும் பொருளைக் கண்டு வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாமல் கடல் நஞ்சு உண்ட கண்டன்தன்னைக் காண் என்றார்கள். அதுபோல, புலனடக்கம் செய்யப் போகின்றவன் எந்த வழியை மேற்கொள்ள வேண்டும்? பரதன் மேற்கொண்ட வழியைக் கவிஞன் சொல்கின்றான். 'அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணனாக வாழ்ந்தான் அவன். இரவு பகல் வேறுபாடற்று, கண்ணிர் அருவியாகப் பாய்கின்ற ஒரு சூழ்நிலையிலே அவன் மனம் போய்விட்டது. ஆகவே, எதிரே இருந்த பொருள் எதனையும் அவன் அனுபவிக்க வில்லை. உள்ளம் உறுதிப்பாட்டிலே நின்றது; இராமனை நினைந்து நின்றது; அவனிடத்திலேயே ஈடுபட்டது. ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/121&oldid=770631" இலிருந்து மீள்விக்கப்பட்டது