பக்கம்:கம்பன் கலை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கம்பன் கலை அதைப் பற்றி நன்கு மனத்தில் வாங்கிக்கொள்ளுவதும் அதனை விளங்கிக் கொள்வதும் கடினமாகும். சந்திரனை நாம் அனைவரும் கண்டுள்ளோம். நிர்மலமான ஆகாயத்தில் முழுச் சந்திரன் புறப்படும் பொழுது நம்முடைய கவனத்தைப் பற்றி ஈர்க்கின்றது. என்றாலும், இருளைக் கிழித்துக்கொண்டு புறப்படுகின்ற இந்தச் சந்திரன், நம் வாழ்வில் பல முறை கண்ட இச்சந்திரன், நம்முடைய கற்பனையில் மட்டும் காட்சி அளிக்கின்ற தருமத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கவிஞன் செய்கிறான். தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனி வெண் திங்கள்' என்று கம்பநாடன் கூறும்பொழுது, இதுவரையில் நம்முடைய கற்பனையில், அக மனத்தில் மட்டுமே அறியப்பெற்ற தருமம், திடீரென்று முழு வடிவும் ஒளியும் பெற்று நம் கண் எதிரே காட்சி அளிக்கின்றது. இத்தகைய ஒரு பயனை-அதாவது கருத்தில் மட்டும் அறிந்த ஒன்றைக் கட்புலனுக்கும் எளிதாகக் கொண்டுவந்த புதுமையை கவிஞன் உவமையால் செய்துவிடுகிறான். 'சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமன் என்று கவிஞன் குறிப்பிடும்பொழுது தாமரைக்கு இல்லாத ஒரு சிறப்பை அதாவது சிரிக்கின்ற இயல்பை அத் தாமரையினிடம் ஏற்றி, அதனைத் தம்முடைய உள்ளத்திற் புகுத்திய பிறகு சக்கவர்த்தித் திருக்குமாரனின் கண்களை நாம் காணுமாறு செய்கிறான். பங்கயக் கண்கள் அல்லது கமலம் போன்ற கண்கள் என்று கூறினால், அக்கமலம் விரிதல், மலர்தல், கூம்புதல், வாடுதல் ஆகிய பல நிலைகளுக்கும் உட்பட்டதன்றோ? எனவே, இராமபிரானுடய கண்கள் எந்த நிலையிலுள்ள தாமரையை ஒத்து இருந்தன என்று ஐயப்படுபவர்களுக்கு அவர்கள் ஐயப்பாட்டைப் போக்குபவன் போலச் சிரித்த பங்கயம் என்று கவிஞன் கூறுகிறான். இந்தச் சொற்களைக் கூறிய உடனேயே புதிதாக மலர்ச்சி அடைந்த தாமரை நம் கண்முன் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/177&oldid=770692" இலிருந்து மீள்விக்கப்பட்டது