பக்கம்:கம்பன் கலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 11 இரண்டு அவதாரங்களையும் வைத்துப் பார்க்கும் போது, மூன்றாவதாக ஒருவன் இருக்கின்றானே தசரதன் - அவன் இந்தக் காட்சியைப் எப்படிப் பார்க்கின்றான்? முழு அவதாரமாகிய தன்னுடைய மகன் இராகவன் இருக்கின்றானே அவனுடைய ஆற்றலை, பெற்றவனாகிய தசரதன் புரிந்து கொள்ளவேயில்லை பெற்றது தவிர. அவன் யார் என்பதை விசுவாமித்திரன் எடுத்துக்காட்டியிருக் கிறான். யாருமே வெல்ல முடியாத தாடகையை வென்று இருக்கிறான் என்பதை அறிந்து இருக்கிறான். யாரும்ே வளைக்க முடியாத சிவதனுசை வளைத்தான் என்பதைக் கேட்டிருக்கிறான். லோகமாதாவாகிய பிராட்டியை மணம் செய்து கொண்டு வந்திருக்கிறான் மகன். இவ்வளவு தெரிந்திருந்தும் தன்னுடைய மகனின் ஆற்றலை இவன் அறிந்து கொள்ளாததற்கு ஒரே காரணம் பிள்ளைப் பாசம் என்று சொல்லப்படும். அறிவை மறைக்கின்ற பிள்ளைப் பாசத்தினாலே முழுவதுமாக மூடப்பட்டிருக்கின்ற தசரதன் 'தன்னுடைய மகன் பரசுராமனையும் வெல்லக்கூடும்” எனச் சிந்திக்கவேயில்லை. சிவதனுசை வளைத்து ஒடித்தவனுக்குப் பரசுராமன் ஒரு பொருட்டன்று என்று நினைத்திருக்கவேண்டும். அறிவாற்றல் மிக்கவனாகிய தசரதனுக்கு இது தெரியாதா? பின்னர் ஏன் அது வெளிப்படவில்லை? அங்கேதான் - அறிவினால் அறிந்து பார்த்திருந்தால் இந்த உண்மை விளங்கியிருக்கும். இங்கு அறிவு வெளிப்படவில்லை என்பதைக் கவிச்சக்கரவர்த்தி வைத்துக் காட்டுவான். “யானும், என் மகனும், என் குடும்பமும் உனக்கு அடைக்கலம்" என்று சொல்லும் அளவுக்குக் கீழே இறங்கி விடுகிறான். ஆக பிள்ளைப் பாசமும்கூட அளவை மீறுமேயானால் அவனுடைய தன்மானத்தையும் சுயமரியாதையையும் கெளரவத்தையும் போக்கிவிடுகிறது என்பதைப் போகிற போக்கிலே வைத்துக் காட்டுவான் கவிச்சக்கரவர்த்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/19&oldid=770706" இலிருந்து மீள்விக்கப்பட்டது