பக்கம்:கம்பன் கலை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 185 நொய்மையானதும், நிற்க முடியாததுமான வாதம் என்பது விளங்கும். முதலாவது, பலராலும் வாய் கூசாமல் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெறும் கற்புடை மகளிர் பிறர் நெஞ்சு புகார் என்ற மேல்வரிச் சட்டத்தையே எடுத்துக்கொண்டு ஆராயலாம். இதனை எடுத்துக் கூறுபவர்களில் 99 சதவிகிதத்தினர் இதன் பொருளை நின்று ஆராய்வதில்லை. "புகார் என்ற சொல்லுக்குப் புகமாட்டார்', 'துழைய மாட்டார் என்பது பொருளாகும். புகார் என்ற எதிர்மறை வினைமுற்றுக்கு எழுவாய் எது? கற்புடை மகளிர் என்பதே எழுவாயாகும். அதாவது, உண்மையிலேயே கற்புடைய மகளிர் தம் கணவனைத் தவிரப் பிற ஆடவர் நெஞ்சில் விரும்பிப் புகமாட்டார் என்பதுதானே இதனுடைய பொருள். அம்மகளிரின் செயல்தான் இதில் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர பிறரைப்பற்றிய குறிப்பு இதில் எதுவும் இல்லை. இதன் எதிராக ஓர் ஆண் மகன் தன்னுடைய மனத்தில் பிற மகளிரை நினைத்தாலோ அடையவேண்டு மென்று கருதினாலோ, அது முழுவதும் அவனைப் பற்றியதே தவிர அந்தப் பெண்ணைப் பற்றியதன்று. கடமை உணர்ச்சியும் கட்டுப்பாடும் இல்லாத ஒருவன் ஏதாவது ஒரு பெண்ணைப்பற்றித் தவறான எண்ணங் கொண்டால் ஒரு பாவமும் அறியாத அந்தப் பெண்ணை இதில் சம்பந்தப் படுத்துவது எவ்வாறு பொருந்தும்? இவன் செயல்களுக்கு முழுவதும் இவன்தான் பொறுப்பாளியே தவிர அவள் பற்றிய தொடர்பு இதில் எள்ளளவும் இல்லை. எனவே, கற்புடை மகளிர் தம் கணவனைத் தவிரப் பிற ஆடவரை மனத்தில்கூட நினைக்க மாட்டார்கள என்ற வரிக்கு உண்மையான பொருளை அறிந்து கொண்டவர்கள் இவ்வரியைக் கூறிச் சீதையைப் பழிப்பது இயலாத காரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/196&oldid=770713" இலிருந்து மீள்விக்கப்பட்டது