பக்கம்:கம்பன் கலை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 189 கூறுகிறான். தலைவன் கூறுகிறான் என்பதால் மட்டும் பாங்கன் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்வதில்லை. தானே சென்று தன் கண்களால் தலைவியைக் கண்ட பிறகுதான் தன் தலைவன் அவளைப்பற்றிக் கூறியன உண்மையானவை என்று உணருகிறான். இவற்றால் அறியப்பட வேண்டியது ஒன்று உண்டு. ஒருவன் ஒருத்தியிடம் மனத்தைப் பறிகொடுக்க வேண்டுமாயின் அதற்கு இன்றியமையாது வேண்டப் படுவது அவளை அவன் தன் கண்களால் ஒருமுறையாவது காணவேண்டும் என்பதுதான். இவ்வாறு ஒருமுறைகூடக் காணாமல் யாரோ ஒருவர் வருணித்துக் கூறியதை மட்டும் வைத்துக்கொண்டு காமவசப்பட்டான் என்றால் அதில் ஏற்கமுடியாத பல இடர்ப்பாடுகள் உண்டு. இப்பொழுது இராவணன் செயல்களைக் காணலாம். இராவணன் கொலுமண்டபத்தில் இருக்கும்பொழுது உறுப்பிழந்த அவன் தங்கையாகிய சூர்ப்பணகை வந்து அரற்றினாள். கரன் முதலியோர் இறந்துபட்டனர் என்றவுடன் இராவணனுக்குப் பகைவர் பற்றிய மதிப்பீடு மாறுகிறது. இத்துணை வன்மையுடையவர்கள் சுத்த வீரர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். சுத்த வீரர்கள் ஒரு பெண்ணைக் காரணம் இன்றி இவ்வாறு செய்யமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வருகிறான். இந்த முடிவுக்கு அவன் வந்தமையால்தான், 'நீஇடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை இன்னே வாயிடைஇதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான்' - (சூர். சூழ்-66) இதுவரை காரணம் கேளாமல் இருந்த இலங்கை வேந்தன் இப்பொழுது காரணம் கேட்கிறான். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த சூர்ப்பனகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/200&oldid=770718" இலிருந்து மீள்விக்கப்பட்டது