பக்கம்:கம்பன் கலை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் & 215 உடன்பாட்டு முகத்தான் கூற முடியாமல் "நேதி' இது அன்று) என்ற எதிர்மறை வாய்பாட்டால் கூறியதை மனத்துட் கொண்ட கம்பநாடன் "தள்ள அருமறைகளும் மருளும் தன்மையான்" -இரணி, 75 என்று பாடிச் செல்கிறான். சங்கரருடைய அத்வைதம் உபநிடதங்கட்குப் புதிய பொருள் வகுக்கும் முறையில் தன் கருத்துக்கும் கொள்கைக்கும் வலுவூட்டியது. வேதம், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்பவற்றில் உபநிடதங்கள் அறிவின் துணை கொண்டு இறைப் பொருளையும் அதன் இயல்புகளையும் ஆயத் தொடங்கியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேதம் என்ற சொல்லை ஓரளவு பயன்படுத்தினரே ஒழிய அதன் அந்தமாகிய உபநிடதம் பற்றி ஒன்றுங் கூறவில்லை. உபநிடதக் கருத்துகள் சில நம்மாழ்வார் பாடல்களில் காணப்பெற்றாலும் உப நிடதங்கள் பற்றிய குறிப்பு ஒன்றும் இவர்கள் பாடல்களில் இல்லை. வேதம் என்று அவர்கள் கூறும் பொழுதே அதன் அந்தமாகிய உபநிடதமும் அதில் அடங்கும் என்ற வாதம் ஆயத்தக்கதேயாகும். - எனவே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் வலியுறுத்திய பக்தி மார்க்கம், சங்கரருடைய அத்வைத மார்க்கம் என்ற இரண்டும் வலுப்பெற்றிருந்த காலத்தில் தோன்றியவன் கம்ப நாடனாவான். 'கல்வியிற் பெரியவன் கம்பன்' என்ற முதுமொழி தோன்ற வேண்டிய அளவிற்குக் கல்விக் கடலைக் கரை கண்டவனாவான் கம்ப நாடன். அப்படியானால் இந்த இரண்டு வழிகளையும் அவன் மிக நன்றாக அறிந்திருத்தல் வேண்டும் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. என்றால், இந்த இரண்டு மார்க்கங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/226&oldid=770746" இலிருந்து மீள்விக்கப்பட்டது