பக்கம்:கம்பன் கலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 37 என்ற அனுமனின் விளக்கம் சுக்கிரீவனுடைய மனத்தில் ஓர் அமைதியைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படியே இருப்பினும் மனைவியை இழந்து நிற்பவர், அவளை மீட்டுப் பெற வேண்டும் என்று விழைபவர், அம்முயற்சிக்கு உறுதுணையாக வலிமைமிக்க வாலியை நாடுவரே அன்றித் தன்னை ஏன் நாடவேண்டும் என்ற ஐயம் அடுத்துத் தோன்றுவது நியாயமானதேயாகும். சொல்லின் செல்வன் இந்த ஐயத்தையும் எதிர்பார்த்து இதற்கும் விடை கூறுகிறான்: "நீ ஐயா! தவம்இழைத் துடைமையால், நெடுமணம் துாயையா உடைமையால் உறவினைத் துணிகுவன்" நட்பு-14) என்ற முறையில் விடை இறுத்துவிட்டு, மறுபடியும் வாலியை ஒழிக்கவல்லவர்கள் என்ற கருத்தை இறுதியாகவும் கூறி முடிக்கிறான் மாருதி. "தந்திருந்தனர் அருள், தகைநெடும் பகைஞன் ஆம் இந்திரன் சிறுவனுக்கு இறுதிஇன்று, இசைதரும்" நட்பு-15) என்று கூறிவிட்டுப் "புந்தியின் பெருமையாய் போதரு’ (15) என்று முடித்தான். சுக்கிரீவன் வாய்திறந்து ஒரு வினாவைக்கூடக் கேட்காத நிலையில் அவன் மனத்தில் எழக்கூடிய ஐயங்கள், வினாக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்பார்த்து அவை அனைத்துக்கும் விடையும் விளக்கமும் தருகிறான் மாருதியாகலின், அவனைச் சொல்லின் செல்வன்' என்று எதிரது அறியும் இராமன் கூறியதில் வியப்பொன்றும் இல்லை. இத்துணை அளவு மாருதியால் தேற்றப்பட்டு, இராமனைக் காணப் புறப்படுகிறான் சுக்கிரீவன். என்றாலும், அவனுடைய மனத்தில் இருந்த ஐயங்கள் மாருதி சொற்களால் முழுவதும் தீர்ந்துவிட்டன என்று கூறுவதற்கில்லை. இந்நிலையில் அவனுடைய அறிவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/46&oldid=770782" இலிருந்து மீள்விக்கப்பட்டது