பக்கம்:கம்பன் கலை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ல் கம்பன் கலை வசிட்டன் இராமனைப் பற்றிக் கூறிய இச்சொற்களால் சுட்டப்படுவது அம் முனிவனுடைய கருத்து மட்டுமன்று. அந்த மந்திர அவையில் கூடிய அமைச்சர் குழுவின் கருத்தும் அதுவே. ஏன்? நாட்டில் வாழும் மாந்தர்கள் அனைவருடைய கருத்தும் அதுவேயாம். எனவே, இத்தகைய மைந்தனிடத்துச் சுமந்திரன் தீராக் காதல் கொண்டிருந்ததில் வியப்பின்று. எனவே, தசரதனிடம் கொண்ட அன்பு, இராமனிடம் கொண்ட காதல் இரண்டின் இடைப்பட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் சுமந்திரன் “தேய்புரிப் பழங்கயிறு” (நற்றிணை, 284 போல அல்லல் உறுகின்றான் என்றாலும் அமைச்சுத் தொழில் பூண்ட அவன் தன் விருப்பு வெறுப்புகட்கு இடம் தந்து கடமையை மறந்துவிட முடியுமா? இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஒர் ஆவை ஒத்து (மந்திரப் படலம், 32) அவன் நிலைமை இருப்பினும் தன் விருப்பத்தை ஒதுக்கிவிட்டு இப்பொழுது மன்னனிடம் பேசுகிறான் சுமந்திரன்: "ஐயனே! உலகம் புகழும் இராமனுக்கு முடிசூட்டு நடைபெறப் போகிறது என்பதனால் ஏற்படும் பெரு மகிழ்ச்சியை நீ எங்களைத் துறக்க முடிவு செய்துவிட்டாய் என்ற சொல் போக்கடித்து விடுகிறது. உன் குலத்து முன்னோர்கள் மறவாமல் செய்த செயலை நீயும் மேற்கொண்டபொழுது யாம் அதனைத் தடுத்தல் வழக்கும் அன்று; அறத்தைக் காட்டிலும் கொடியது ஒன்றும் இல்லை" என்னும் கருத்துப்பட, "உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத் துறத்தி நீயெனும் சொல்சுடும் உன்குலத் தொல்லோர் மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பது வழக்கன்று அறத்தின் ஊங்குஇனிக் கொடிதுஎனல் ஆவதுஒன்று யாதே? (மந்திரப் படலம், 46)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/62&oldid=770800" இலிருந்து மீள்விக்கப்பட்டது