பக்கம்:கம்பன் கலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூரிய தேர்வலான் 55 கவனிக்கவே இல்லை சுமந்திரன். ஆனால், இன்று அரசனே தனக்கு வயதாகிவிட்டது, தான் தவஞ் செய்யச் செல்லவேண்டும் என்று கூறும் பொழுதுதான் சுமந்திரன் இத்தனை நாட்களும் தான் கவனியாமல் விட்டுவிட்டதொன்றைக் கவனிக்கிறான். தசரதனைப் பிரிந்து தனி வாழ்வு வாழ நேரிடும் என்பதை அந்த அமைச்சன் கனவிலும் கருதியது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக இன்று அந்த நிலை வந்துவிட்டது. அதுவும் அறத்தின் வழியாகும் என்று கண்ட பின்னர்த் தனக்கு ஏற்படும் பிரிவுத் துய்ரைப் பெரிதெனக் கருதி அரசனைத் தடைசெய்வதும் தவறு என்பதை உணருகிறான். அமைச்சன். அறுபதினாயிரம் ஆண்டுகள் சுகபோக வாழ்வு வாழ்ந்த மன்னன் காட்டில் சென்று காய்கனிகளை உண்டு வாழப் போகிறான் என்று நினைக்கவும் முடியவில்லை அந்த நட்புரிமை பூண்ட சுமந்திரனுக்கு. எனவே தசரதன் காடு சென்று வாழ்வது அறத்தின்பாலதாயினும் சுமந்திரனைப் பொறுத்தவரை கொடுமையானது தான். ஆதலால் அந்தக் கொடுமையான செயலை, அமங்கலமான செயலைத் தன் வாயாற்கூறவும் அஞ்சுகிறார் அமைச்சர் பெருந்தகை. இராமனை அரசனாக்குக என்று மூன்று அடிகளில் விவரமாகக் கூறிய அமைச்சன் நான்காம் அடியில் தன் வாயால் கூற விரும்பாத ஒன்றைக் குறிப்பாகக் கூறுகிறான். நீ விரும்பினால் காடு செல்வாயாக’ என்பது மங்கலமற்ற மொழிகளாகப் படுகிறமையின், அப்புறத்து அடுத்தது புரிவாய் (மந்.ப.47) என்று கூறுவது நோக்கற்குரியது. 'முடிசூட்டல் நிகழ்ந்த பின் செய்யப்பட வேண்டியதை நீ செய்வாயாக என்பதே இதன் பொருள். இவ்வாறு சுமந்திரன் கூறுவதனால் தசரதன்மாட்டு அவன் கொண்டிருந்த அளவிலா ஆர்வம் நன்கு விளங்குகிறது. இந்நிலையில் தசரதன் இராமனைப் பற்றிக் கைகேயியிடம் கூறிய சொற்கள் நினைவு கூர்தற்குரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/65&oldid=770803" இலிருந்து மீள்விக்கப்பட்டது