பக்கம்:கம்பன் கலை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முறுவலித்தது ஏன்? கங்கை வேடனாகிய குகனுடைய அதிகார எல்லைக்குள் சக்கரவர்த்தித் திருமகனாம் இராமன், மனைவி, தம்பி ஆகிய இருவரோடும் வந்து தங்கியுள்ளான். அழகிய பர்ணசாலையினுள் இராமன் வீற்றிருக்க அவனைச் சுற்றிப் பேரறிஞர்களும், முனிவர்களும், தவசிகளும் அமர்ந்துள்ளனர். வெளியே தம்பி எனும்படிக்கு அல்லாமல், அடியரின் ஏவல் செய்ய வந்தவனாகிய இலக்குவன் காவல் காத்து நிற்கின்றான். உள்ளே இருக்கின்ற முனிவர்கள் இராமனைக் காண வந்துள்ளார்கள். ஆனால், என்ன கருத்தோடு அவனைக் காண வந்தார்கள்? சக்கரவர்த்தித் திருமகன், முடி சூட வேண்டியவன், முடியைத் துறந்து காட்டிற்கு வந்துள்ளானே என்றோ, அன்னத்தின் துவியை ஒத்த மெல்லிய பாதங்களையுடைய சீதை, இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்புளிக்கக் காட்டில் நடந்து வந்துள்ளாளே, அவள் என்ன பாடுபட்டாளோ என்றோ அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை! ஆனால், தாங்கள் செல்கதிக்கு நாயகனாகிய இராமனைக் காண வந்துள்ளார்கள். பிறவிப் பெருங்கடலை நீந்தியதால் உண்டாகிய மிக்க மகிழ்ச்சியோடு வந்தார்கள் என்று கம்பன் கூறுகிறான். எனவே, தம்முடைய பிறவிப் பயனை எதிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/85&oldid=770825" இலிருந்து மீள்விக்கப்பட்டது