பக்கம்:கம்பன் கலை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறுவலித்தது ஏன் ? 77 அறிவாற்றல் மிக்க இப் பெருமக்களின் எதிரே மற்றொரு காட்சியும் தோன்றுகிறது. இப்பிறப்பில் இன்றேனும், பழைய பிறவிகளிற்கூடக் கல்வி, அறிவு என்பவற்றோடு உறவு கொள்ளாதவனாகிய வேடுவன் ஒருவன் இராமனைக் காண வந்துள்ளான். அவனுடைய வடிவத்தைக் கண்டவர் யாவரும் அருவருப்புக் கொள்வரே தவிர, விரும்பத் தகுந்த தகுதி ஏதும் அவன்மாட்டு இருப்பதாகவே தெரியவில்லை. என்றாலும் இலக்குவன் அந்த வேடுவன் பேசிய இரண்டொரு வார்த்தைகளிலேயே அவனுடைய பண்பாட்டை நன்கு அறிந்து கொள்கிறான். அறிவதோடுமட்டுமன்றி உள்ளே இராமனிடம் சென்று, "தாயினும் நல்லவனாகிய ஒருவன் உன்னைக் காண வந்திருக்கிறான்” என்றும் கூறுகின்றான். - அச்சத்தையும் அருவருப்பையும் தருகின்ற வடிவுடைய குகன் பேசிய இரண்டொரு வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே இலக்குவன் அவனைப் பெற்ற தாயினும் நல்லவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். இஃது எவ்வாறு முடிந்தது? இலக்குவனுடைய வாழ்க்கையில், ஏன் இராமனுடைய வாழ்க்கையிலுங்கூட இதுவரை நடைபெற்ற துன்பங்கள் அனைத்தும், அறிவின் துணை கொண்டு நடைபெற்றவைதாமே, கைகேயியின் சூழ்ச்சியும், கூனியின் சூழ்ச்சியும், கொடுத்த வாக்கை மீற முடியாமல் மன்னன் தத்தளித்ததும் அறிவின் துணைகொண்டு நடைபெற்றவை அல்லவா? உணர்வின் வழிநின்று பார்க்கும்பொழுது அவை யாவும் பயனற்ற செயல்களாகும். உணர்வின் வழிநின்று கைகேயியே சிந்தித்திருப்பாளேயானால் அவ்வளவு போராடி அரசைத் தன் மகனுக்குப் பெற்றிருக்க வேண்டியதில்லை. அறிவினால் ஆராய்ந்து பார்த்த அவள்தான், தன்மகன், மாற்றாள் மகன் என்ற வேறுபாட்டைக் கண்டாள். உணர்வை முக்கியமாக அவள் கொண்டிருப்பின் தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/87&oldid=770827" இலிருந்து மீள்விக்கப்பட்டது