பக்கம்:கம்பன் கலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறுவலித்தது ஏன் ? ) 79 வந்தவர்களுடைய பசியைப் போக்கவேண்டும் என்பதே ஆகும். அரண்மனையில் வாழ்ந்திருப்பவர்களுக்கு வேளாவேளைக்கு இருப்பிடம் தேடி உணவு வரும், ஆனால், காட்டில் புகுந்துவிட்ட அவர்களுக்கு இருக்கும் இடம் தேடி வேளைக்கு உணவு கொடுக்கக்கூடியவர்கள் யார்? எங்கிருந்தாலும் குழந்தைகளின் வலிமை, ஆற்றல் முதலியவை பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பசி ஒன்றையே பெரிதாகக் கருதி உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் இவ்வுலகில் யாராக இருக்க முடியும்? பால் நினைந்து ஊட்டும் தாய் அல்லாமல் வேறு யார் இதனைச் சிந்திக்க முடியும்? எனவே, முனிவர்களெல்லாம் கையை வீசிக்கொண்டு இராமனைக் காண வந்ததையும், குகன் மட்டும் ஒரு கலயத்தில் தனக்குக் கிடைப்பவையாகிய தேனையும் மீனையும் சமைத்துக் கொண்டு வந்ததையும் கண்ட இலக்குவன் மனம் பாகாக உருகிவிடுகின்றது. தாய் ஒருத்தி மட்டுமே நினைத்துச் செய்யக்கூடிய அக்காரியத்தை ஆண் மகனாக இருந்தும் கூட குகன் செய்துவிட்டான். எனவே, அவனை எடைபோட வந்த இளையபெருமாள் தாயினும் நல்லான் என்று கூறுகிறான். இனி, இலக்குவனுடைய அன்பைப் பெற்ற குகன் உள்ளே செல்கிறான். இராமனைக் கண்டு அக் குகன் பேசுகின்ற பேச்சு மிகப் புதுமையான முறையில் அமைந்து இருக்கின்றது. தனக்கு வணக்கம் செலுத்திய குகனை இருத்தி ஈண்டு என்று உபசரிக்கின்றான் இராமன். குகன் கற்றறிவுடையவனாக இருந்திருப்பின், உடனே இராமனுடைய யோக rேமங்களையும், அவன் காட்டுக்கு வரவேண்டி நேர்ந்த காரணத்தையும் விசாரித்திருப்பான். நாகரிகம் என்ற போலிப் பெயர் பூண்டோரும் அறிவால் மேம்பட்டோரும் ஒருவரைக் கண்டவுடன் பேசுவது இவ்வாறுதானே இருத்தல் கூடும்? அவ்வாறு செய்யாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/89&oldid=770829" இலிருந்து மீள்விக்கப்பட்டது