பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இது கி. பி. மூன்றாம் நூற்றண்டுக்கு முற்பட்டது. இதிலே என்ன காண்கிறோம்? கோவலனும் கண்ணகியும் புகார் நகர் நீங்கினர். இவ்விருவரும் அந்நகர் விட்டுச் சென்றபின் அந்நகர் எக் காட்சி வழங்கியது?

இராமன் வனம் சென்ற பின் அயோத்தி எக்காட்சி வழங்கியதோ அத்தகைய காட்சி வழங்கியது புகார் நகரம்.

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புறஞ்சேரியிறுத்த காதையில் பின்வரும் வரிகளைக் காண்கிறோம். வேறு யாரும் சொல்ல வில்லை; இளங்கோ அடிகள் சொல்கிறார்.


பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அருங்கானடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல்
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்

(சிலப்பு 12 — 63-66)

அதே சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைக்கு வருவோம். அங்கே என்ன காண்கிறோம்?


மூவுலகும் ஈரடியால்முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடு காண்போந்து
சோவரணும் போர்மடியத் தென்னிலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர்கேளாத செவி என்ன செவியே.

திருமாலே மனித உருக்கொண்டு இராமனாக வந்தான் என்ற கொள்கை சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்நாட்டில் வேர் கொண்டு விட்டது என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?