பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இந்நூல் புற நானூறு எனும் பெயர் பெற்றது. இதிலே ஒரு பாடல் காண்கிறோம். அது வருமாறு :


கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிங்தாங்கு
அறாஅவரு நகை இனிது பெற்றிகுமே

(புறம் 378)

பசுங்குடையார் என்பவர் ஒரு புலவர். இளம் செட் சென்னி எனும் சோழ அரசனைப் புகழ்ந்து பாடினார் அவர்; அணிகள் சிலவற்றை அவருக்குப் பரிசாக வழங்கினான் அரசன். அந்த அணிகளைக் கொண்டு போய் தம் குழந்தைகளுக்குக் கொடுத்தார் புலவர்.

குழந்தைகள் என்ன செய்தன? காலுக்கு இடவேண்டிய அணிகளைக் கைக்கு இட்டன. கைக்கு இடவேண்டியவற்றைக் காலுக்கு இட்டன. இப்படி மாறி மாறி அணிந்து மகிழ்ந்தனவாம். அது எது போல் இருந்தது?

இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவள் தனது அணிகள் சிலவற்றை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கீழே எறிந்தாள். அது ருசிய முக பர்வதத்திலே இருந்த குரங்குகள் நடுவே வீழ்ந்தது.

குரங்குகள் என்ன செய்தன? மூட்டையை எடுத்தன; அவிழ்த்தன; அணிகளை எடுத்தன; கையில் இடவேண்டிய அணிகளைக் காலில் இட்டன; காலில் இடவேண்டியவற்றைக் கையில் இட்டன. இப்படி மாற்றி அவற்றை அணிந்து கொண்டு குதித்தன. புலவரது குழந்தைகளின் செயலும் இம்மாதிரி இருந்ததாம். இவ்வாறு சங்க இலக்கியம் சொல்கிறது.

2