பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11



பிரகலாதனுக்கு அருள் புரிய வேண்டித் திருமால் நரசிம்மாவதாரம் எடுத்தார் அல்லவா? அப்போது எங்கிருந்து தோன்றினார்? கம்பத்திலிருந்து தானே தோன்றினார்! ஆகவே, கம்பர் என்பது நரசிம்ம சுவாமிக்குரிய தமிழ்ப் பெயர்.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் பல்லவன் நந்தி வர்மன். இவனுடைய அரசியல் அதிகாரி ஒருவனது பெயர் கம்பன் அரையன் என்பது.

தெள்ளாறு எறிந்த நந்திவர்மப் பல்லவனின் இரண்டாவது மகன் பெயர் கம்பவர்மன்.

முதல் இராசராச சோழனுடைய படைத் தலைவன் ஒருவன் கம்பன் மணியன்[1] எனும் பெயருடன் இருந்தான். அரசியல் அதிகாரி ஒருவனுக்குக் கம்பன்[2] என்று பெயர்.

எனவே கம்பன் என்பது இயற்கையாகவே வழங்கி வந்த பெயர்; திருமாலுக்குரிய பெயர்.

கம்பர் பிறந்த ஊர் எது? இது அடுத்த கேள்வி. தஞ்சை ஜில்லாவிலே தேரழுந்தூர் என்று வழங்கப்படும் திருவழுந்தூரே இவர் பிறந்த ஊர் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

கம்பன் பிறந்த ஊர்; காவேரி தங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர் — செம்பதுமத்
தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா
ஓதகத்தார் வாழும் அழுந்தூர்


  1. திருப்பழனாம் கல்வெட்டு
  2. திருக்கோவலூர் கல்வெட்டு