பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அந்த ஆறு பாயும் இடம் எங்கும் நலமே செய்தது; தீமை ஏதும் செய்யவில்லை. மக்கள் நலம் பெற்றார்கள்; நாடு நலம் பெற்றது.

கோசல நாடு வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய்போல விளங்கியது சரயு. தாய் எவ்வாறு தன் சேய்க்குப் பாலூட்டி வளர்க்கிறாளோ அவ்வாறே கோசல நாட்டு மக்களையும் உயிர் இனங்களையும் நீருட்டி வளர்த்தது சரயு என்ற அந்த ஆறு.

இரவி தன் குலத்து — சூரிய குலத்தில் தோன்றிய ; எண் இல்—எண்ணில் அடங்காத; பார் வேந்தர் தம்—அரசர்களுடைய பரவும் — புகழ்ந்து பேசப்படும்; ஒழுக்கின்படி — நல் ஒழுக்கம் போலவே பூண்டது — நல் ஒழுக்கம் பூண்டது. சரயு என்பது — சரயு என்று சொல்லப்படுகிற ஆறு. இவ் உரவு நீர் நிலத்து உயிர்க்கு எலாம் — உலாவும் தன்மை உடைய — நீர் உள்ள கடலினால் சூழப்பட்ட இந் நிலை உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம்; தாய் முலை அன்னது — தன் சிறு குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும் தாயின் மார்பு போன்றது.

தாது உகு சோலை தோறும்
        சண்பகக் காடு தோறும்
போது அவிழ் பொய்கை தோறும்
        புது மணல் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனம் தோறும்
        வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிர் என
        உலாயது அன்றே