பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

 “இப்பொழுதே நான் சென்று அம்முனிவரை இங்கு அழைத்து வருவேன்” என்று கூறித் தன் தேர் மீது ஏறினான்.

சிற்றரசர்கள் வணங்கினார்கள். சுமந்திரனை முதல்வராகக் கொண்ட அமைச்சர்கள் தொழுதார்கள்.

“இன்றே நம் முறை தீர்ந்தது” என்று தேவர்கள் மலர் மாரி பெய்து தசரதனை வாழ்த்தினார்கள்.

என்றலுமே–இவ்வாறு (வசிட்ட முனிவர்) கூறலுமே; முனிவரன் தன் அடி இறைஞ்சி—அந்த வசிஷ்ட முனிவரின் திருவடிகளை வணங்கி; ஈண்டு ஏகி—இப்பொழுதே சென்று; கொணர்வேன் எனா–அம் முனிவரை அழைத்து வருவேன் என்று கூறி; துன்று கழல்–வீரக் கழல்களையும்; முடி–கிரீடங்களையும் அணிந்த; வேந்தர்—சிற்றரசர் பலர்; அடி போற்ற—தனது திருவடிகளை வணங்க; சுமந்திரனே முதலாக உள்ளிட்ட–சுமந்திரனை முதல்வராகக் கொண்ட; வன்திறல் அமைச்சர்கள்—திறமை மிக்க மந்திரிகள்; தொழ—வணங்க; மாமணித் தேர் ஏறலும்-சிறந்த மணிகள் பதித்த தனது தேர் மீது ஏறிய உடனே; வானோர்—தேவர்கள்; இன்று எமது வினை முடிந்தது என இன்று எமது குறை தீர்ந்தது என்று; வாழ்த்தி-தசரதனை வாழ்த்தி; மலர்மாரி—கற்பகப் பூ மழையை; சொரிந்தனர் இடைவிடாமல்–தொடர்ந்து சொரிந்தார்கள்.

தேரில் ஏறிய தசரத மன்னன் அங்க நாடு அடைத்தான். தசரதனின் வருகை அறிந்தான் உரோம பாதன்; சக்கரவர்த்தியை எதிர் கொண்டு அழைத்தான்; தனது