பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



91


இமையாத கண்கள்; ஆயிரம் இல்லை என்று – ஆயிரம் இல்லையே என்று; அல்லல் எய்தினான் – (எண்ணி) துன்பம் அடைந்தான் இராவணன்.

ஆண்டையான் அனையன உன்னி
        ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை
        முறை இலோன் தனைக்
காண்டலும் கண்ணின் நீர்
        துடைத்த கற்பினாள்
“ஈண்டு எழுந்தருளும்”
        என்று இனிய கூறினாள்.

தன் கணவனுக்கு நேர்ந்த துன்பம் கேட்டுக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த சீதை அக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கட்டுக்கு அடங்காத ஆசை மேலும் மேலும் உந்த அங்கே நின்று கொண்டிருந்த கபட சந்நியாசியை வரவேற்றாள் “இங்கே எழுந்தருள்வீர்” என்று இனிய சொல் கூறினாள்.

ஆண்டையான் – அங்கிருந்து கொண்டு; அனையன – மேற்கூறியவற்றையெல்லாம்; உன்னி – எண்ணி; ஆசை மேல் மூண்டு எழு – ஆசையானது மேலும் மேலும் மூண்டு எழுகின்ற; முறை இலான் – நல்வழி நில்லாத அந்த கபட சந்நியாசியை; கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கண்களிலிருந்து பெருகும் நீரைத் துடைத்துக்கொண்டு சிறந்த கற்புடையவளாகிய; சீதை “ஈண்டு எழுந்தருளும்” என்று. நீவிர் இங்கே எழுந்தருள்வீராக என்று; இனிய கூறினாள் – இனிய சொல் கூறினாள்.