பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102



நினைத்திலீர் அற நெறி
        நினைக் கிலாதவர்
இனத்திடை வைகினீர்;
        என் செய்தீர்?” என்றாள்.

“காட்டிலே அருந்தவம் புரியும் முனிவர் மத்தியிலே வாழ்ந்தீர் அல்லீர்; நீர் வளம் மலிந்த நாட்டிலே பரிசுத்தமானவர்கள் வாழ்கின்ற பதிகளிலே வாழ்ந்தீர் அல்லீர்; தரும நெறி பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாத அரக்கரிடையே வாழ்ந்தீர். என்ன காரியம் செய்தீர்!” என்றாள்.

வனத்து இடை– காட்டினிடத்தே வாழும்; மாதவர்– தவம்புரி முனிவர்; மருங்கு– அருகே; வைகலீர்– தங்கியிருந்தீர் அல்லீர்; புனல் திரு நாட்டிடை– நீர் வளம் மிக்க சிறப்பு மிகுநாட்டிலே வாழும்; புனிதர்– புண்ணிய சீலர்கள்; பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறவர்கள்; ஊர் புக– இருக்கும் ஊர்களுக்குச் செல்ல; நினைத்திலீர்– நினைத்தீர் அல்லீர்; அறநெறி– தரும மார்க்கத்தை; நினைக்கிலாதவர்– சிறிதும் நினையாதவர்களான இனத்திடை– அரக்கர் கூட்டத்திலே; வைகினீர்– தங்கியிருந்தீர்; என் செய்தீர்? எத்தகைய தகாத செயல் புரிந்தீர்? என்றாள்– என்று கூறினாள் சீதை.

“அரக்கர் நல்லவரே! தேவர்களைவிடத் தீயர் அல்லர்” என்று சொல்கிறான் இராவணன்.

“தருமத்தை வளர்க்கும் வள்ளலாகிய இராமன் இவ்வனத்தில் அரிய தவம் செய்யும் நாட்களுக்குள் அரக்கர் தம் குலத்தோடு இறந்து ஒழிவார்கள்” என்று சொல்கிறாள் சீதை.

“மானிடர், அரக்கர்தம்மை வேருடன் அழிப்பர். எனின், யானையின் இனத்தை இளமுயல் கொல்லும்; சிங்கத்தை மான்குட்டி கொன்று விடும்!” என்கிறான் இராவணன்.