பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

இடித்துத் தள்ளவிரும்பினாலும்; நீரினைக்கலக்க வேண்டின்– கடல் நீரைக் கலக்கவிரும்பினாலும்; நெருப்பினை அவிக்க வேண்டின்– அக் கடலில் உள்ள வடவா மகா அக்கினி எனும் நெருப்பை அவிக்க விரும்பினாலும்; பாரினை எடுக்க வேண்டின்– பூமியைப் பெயர்த்து எடுக்க விரும்பினாலும்; இராவணற்கு– அந்த இராவணனுக்கு; அரிதுஎன்– முடியாத அரிய காரியம் எது? எதுவுமில்லை. என்றான்.

திக் விஜயம் செய்து வந்த இராவணன் கார்த்தவீரியார்ச்சுனனோடு போர் புரிய விரும்பினான். நர்மதை ஆற்றில் அவன் நீராடுவது அறிந்தான். அங்கு சென்றான். தானும் நீராடினான். கரை சேர்ந்தான் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசை செய்தான்.

அப்போது மேற்கே நீராடிக் கொண்டிருந்த கார்த்தவீரியார்ச்சுனனுக்கு நீர் போதவில்லை. தன் ஐநூறு கைகளாலும் நீரைத் தடுத்தான்; நீரை மிகுவித்தான்; நீர் விளையாடினான், அவ்வாறு நீரைத் தடுத்ததால் எதிர் பொங்கியது வெள்ளம்; கரை புரண்டது. இராவணன் பூசை செய்த சிவலிங்கம் நிலை குலையச்செய்தது. கோபமுற்றான் இராவணன். சேனையோடு சென்றான்; கார்த்தவீரியன் மீது போர் தொடுத்தான். அப்போது கார்த்தவீரியன் தனது ஆயிரங்கைகளாலும் பற்றி இராவணனைச் சிறை வைத்தான். புலத்தியன் சென்று கார்த்தவீரியனுக்கு “இராவணஜித்” எனும் பட்டமளித்து இராவணனை விடுவித்தான். அத்தகைய கார்த்தவீரியன் ஜமதக்கினி முனிவரது ஆசிரமத்துப் பசுவைக் கவர்ந்தான். இரு கை கொண்ட பரசுராமன் சென்று கார்த்தவீரியனைப் போரில் வென்று பசுவை மீட்டான்.