பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

புலன்கள் ஐந்தும்– அரிய புலன்கள் ஐந்தும்; தக்கது என் கொல்– இப்போது என் செய்வது என்று எண்ணி; அலைந்து அலையுற்ற– திரிந்து குழம்பின.

மேவி நிலத்தில் இருக்கும்;
        நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு
        அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி
        எற்ற எண்ணும்
ஆவி பதைப்ப அலக்கண்
        எய்துகின்றான்.

உயிர் பதைக்கிறது; துன்பத்தால் துடிக்கிறான்; தரையில் உட்காருவான்; பின்னர் எழுந்து நிற்பான்; நின்றபடியே தரையில் வீழ்வான்; உயிர்ப்பு அடங்கப் பெற்றுச் சித்திரம் போல் ஓய்ந்து கிடப்பான். பாவியாகிய கைகேயியைப் பிடித்துத் தரையில் மோதிவிடலாமா என்று எண்ணுவான்.

ஆவி பதைப்ப– உயிர் துடிக்க அலக்கண்–துன்பம்; எய்துகின்றான்– அடைகின்ற தசரதன்; மேவி– அத்துன்பத்தினின்றும் மனத்தைத் தேற்றிக் கொண்டு; நிலத்தில் இருக்கும்–எழுந்து உட்காருவான்; நிற்கும்– பின் எழுந்து நிற்பான்; வீழும்– மீண்டும் தரையில் வீழ்வான்; உயிர்ப்பு அடங்கி– மூச்சுப் பேச்சு இல்லாமல்; ஓவியம் ஒப்ப– பதுமை போல; ஓயும்– ஓய்ந்து கிடப்பான்; பாவியை– பாவியாகிய கைகேயியை; எதிர் உற்று– எதிரே போய்; பற்றி– இரு கைகளாலும் பிடித்து; எற்ற– தரையிலே மோத; எண்ணும்– எண்ணுவான்.

2