பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii

அமைத்த அம்புக் கூரையைக் கண்டனர்; வெகுண்டனர். யாகத்தை அழிக்க மாயங்கள் செய்தனர். கண்டான் இரகுவீரன். இரண்டு அம்புகளை எய்தான். இவை இவ்விருவரையும் ஓட ஓட துரத்தியது. சுபாகுவைக் கொன்றது. மாரீசனைக் கடலிலே போட்டது.

வேள்வி முடிந்ததும் மிதிலைக்கு அரசிளங்குமரரை அழைத்துச் சென்றார் முனிவர். வழியில் இராமனின் மரபிலே தோன்றிய சகரன் ஆகியோர் பற்றியும் பகீரதன் தன் முன்னோரை உய்விக்க கங்கையை இவ்வுலகுக்குக் கொண்டு வந்த நிகழ்ச்சியையும் கூறினார்.

விதேக நாட்டின் ஊடே மூவரும் சென்று, மிதிலையின் புறமதிலை அடைந்தனர். அங்கு தான் கௌதம முனிவரின் மனைவி, அகலிகை சாபத்தின் காரணமாகக் கல் உருக்கொண்டு கிடந்தாள். இராமனுடைய திருவடி தூசி அக்கல்லில் பட்டது. சாபம் நீங்கி, சுய உருவம் பெற்றாள் அகலிகை. மீண்டும் தன் கணவனை அடையும் பேறு பெற்றாள்.

மிதிலையை அடைந்தனர் அம்மூவர்.

மிதிலையில் கன்னி மாடத்தின் மேல் மாடத்தில் தோழிகள் சூழ நின்றிருந்தாள் சீதை. அங்கே நின்றான் இராமன். பின்?


“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்!”

சீதைக்குச் சுயம்வரம். ஆனால் இது சிறிது வித்தியாசமானது சிவதனுசுக்கு நாணேற்றுபவனே சீதைக்கு மாலையிடலாம். இந்த இளங்குமரன் என்ன செய்வானோ என்று வியப்புடன் எல்லோரும் இராமனையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள். ‘படார்’ என்ற வில் முறிந்த சத்தம் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.