பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

களும்; வயிர குண்டலம் - வயிரம் பதித்த மகர குண்டலங்களும்; அலம்பு - அசைந்தாடப் பெற்ற; திண் திரள் தோள் புடை வயங்க - மிக்க வலிமையுடைய தோள் இருபதும் இரு பக்கங்களில் விளங்க; சகர நீர் வேலை - சகரர்களால் தோண்டப்பட்ட் நீர் மிகுதியுள்ள கடலை; தழுவிய கதிரின் - தழுவி எழும் சூரியனைப் போல; தலைதொறும் தலைதொறும் தயங்கும் - ஒவ்வொரு தலையிலும் விளங்கும்; வகைய - தன்மையுடைய; பல் மகுடம் - பத்தான பல மகுடங்கள்; இளவெயில் எறிப்ப - இள வெயிலைப் போல் ஒளி வீசவும்; கங்குலும் பகல் பட - அந்த இரவு நேரமானது பகலே போலும் விளங்கவும்; வந்தான் - சீதா பிராட்டியிருந்த அந்த அசோகவனத்துக்கு வந்தான் இராவணன்.

***

உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர
        மேனகை வெள்ளடையுதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
        அரம்பையர் குழாம் புடை சற்றக்
கருப்புறச் சாந்துங் கலவையும் மலரும்
        கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக்களிற்றின்
        வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப

தேவ மங்கையாகிய ஊர்வசி அந்த இராவணனுடைய உடைவாளை ஏந்தித் தொடர்ந்து வந்தாள். மேனகை எனும் மற்றொரு தெய்வ மாது அவன் அருகே நின்று வெற்றிலை மடித்துக் கொடுத்து வந்தாள். திலோத்தமை என்பவள் அவனுடைய செருப்பைத் தூக்கிக் கொண்டு பின்னே சென்றாள். வேறுள் அரம்பையர் யாவரும் அவனைச் சூழந்து சென்றனர். பச்சைக் கற்பூரம் முதலிய வாசனா திரவியங்கள் கலந்த சந்தனமும், பரிமள கந்தம் வீசும் மலர்களும், வாசனை வீசித் திசைக் களிறுகளின் மூக்கைத் துளிைத்தன.