பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


3. காட்சிப் படலம்

இப்படலத்தை சுந்தரகாண்டத்தின் இதயம் எனலாம். அநுமன், அல்லல் உறும் பிராட்டியைக் காண்கிறான்; இராவணன் அவளைக் கண்டு சென்றதும் தன்னை மாய்த்துக்கொள்ள சானகி துணிந்ததைக் கண்டு துடிக்கிறான். உடன் அங்குத் தோன்றி ஆறுதல் புரிந்த செய்திகளை இப்படலம் கூறுகிறது. இலங்கை முழுமையும் தேடியும் காணாமல் மனமுடைந்த மாருதி, அன்னையைக் கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு ஈடுண்டோ? உலகியலுக்கு ஏற்ப அன்னை அண்ணலைப் பிரிந்து தவிக்கும் நிலையை கவிச்சக்கரவர்த்தி தவிர யாரே கூறவல்லார்?திரிசடையின் கனவையும் அன்னையிடம் விபீடணன் மகள் கொண்ட ஆழ்ந்த அன்பையும் காண்கிறோம். அரக்கியரை தன் விஞ்சையால் அயர்வுறச் செய்யும் மாருதியின் அரிய சக்தியை பார்க்கிறோம். அத்துடனா? கம்பநாட்டாழ்வார் பிராட்டியாரின் கற்பு நிலையையும், தூய்மையையும், தவத்தையும் எத்துணைச் சிறப்பாக எடுத்து உரைக்கிறார்.

இப்படலத்தில் இராவணனை இருமுறை சந்திக்கிறோம். முதலில் அவன் உறக்க நிலையில் காட்சி அளிக்கிறான். அடுத்து பிராட்டியை சந்தித்து அச்சுறுத்துகிறான். ஆணவத்தால், தீய எண்ணத்தால் குழையும் அவன் கோலத்தை கவி நமக்குத் திறம்பட காட்டுவதோடு அல்லாமல், அற உருக்கொண்ட சீதையையும் ஆணவம் கொண்ட இராவணனையும் வேற்றுமைபடுத்தி காட்டுகிறார் கம்பன். அறத்தில் பாதுகாவலாக பதுங்கியிருக்கும் அநுமனைப் பார்க்கிறோம். கற்புக்கரசியின் ஒரு சிறு துரும்பு, திண்தோள் இராவணனை தடுத்துவிடுகிறது. பிராட்டிக்குத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அநுமன்.

4. உருக்காட்டு படலம்

இராமனின் அங்க வருணனைகளைக் கூறும் அநுமன் (மாருதி) உள்ளங்காலிலிருந்து உச்சி வரை வர்ணிக்கிறான்.