பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

துறவி இராமன் வருகிறான். ஆரண்ய காண்டத்திலோ, முனிவர் சரணாகதியும், கிட்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சரணாகதியும், சுந்தர காண்டத்தில் பிராட்டி சரணாகதியும், காக்காசுரன் சரணாகதியும் இடம் பெறுகின்றன. யுத்த காண்டத்தில் தன்னிடம் சரண் புகுந்த இலங்கேசனின் தம்பி விபீடணனுக்கு அபயம் தருகிறான்.

விபீடணனுக்கு முடி சூட்டுகிறான்; இலங்கைப் பற்றிய முழு விவரங்களும் அறிந்து, இராவணனின் மாயை, வலிமை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு போர் உத்திகளைக் கையாள்கிறான். இலங்கையில் அநுமன் புரிந்த அரிய வீரச் செயல்கள் படிப்போர் நெஞ்சை நிறைக்கின்றன.

இராமபிரான், திருமாலின் அவதாரமாக இருப்பினும், மானிடனாய் பிறந்ததால் அவனுக்கு ஏற்பட்ட போராட்டங்கள் ஏராளம், ஏராளம். இலங்கைக்கு வழிவிட காலந் தாழ்த்திய வருணன் முதல், ஒவ்வொரு செயலையும் நிறைவேற்ற அவன் போராடியே தீரவேண்டியிருந்தது. என்றாலும் எவ்வளவு துன்பம் வந்தாலும், ஏமாற்றங்களைச் சந்தித்தாலும், சூழ்ச்சிகளைக் கண்டு மனம் துயருற்றாலும், “நேர்மை” என்ற கோட்டைத் தாண்டாத இராமன் கொள்கை வீரனாக எங்குமே விளங்குகிறான்.

இந்த கொள்கை வீரன் போற்றிய வேறொரு கொள்கை வீரனும் உண்டு. அவன் இவனுக்குப் பகையானவன். மறம் என்று தெரிந்தும் அண்ணனுக்காக போரிட்ட அரக்கன். அவனே கும்பகன்னன். தெரிந்தும் பிழை செய்யலாமோ? கூடாது என்பது ஒரு யதார்த்தமான பதில். ஆனால், கும்பகன்னன் ’தன் செஞ்சோற்றுக் கடனை' தீர்ப்பதிலே கண்ணாயிருந்தவன். நன்றிக் கடன் தீர்ப்பது பற்றி வள்ளுவம் உயர்வாக கூறும். இதைக் கடைபிடித்த கும்பகன்னன் கொடியவன் ஆவானா? அண்ணனிடம், போருக்குச் செல்லும் முன் விடைபெறும் தன்மைக் கண்டு கல்லும் உருகாதோ?