பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216



மைந்தனை இழந்த இராவணனின் சோகத்தில் நாமும் கரைகிறோம். ஆனால் அதே சமயம், அவன் தன் தவறுக்கு வருந்தாது, பரிகாரம் தேட மறுக்கிறானே என்று கவிஞனுடன் நாமும் ஏங்குகிறோம்.

இராம இராவண போரில் கம்பன் கூறும் உவமைகள் எவ்வளவு பொறுத்தமானவையாக அமைகின்றன. இருவரும் பெரிய வீரர்கள். இருவரில் யார் வெல்வர் என அனைவரும் ஆவலுடன் பார்க்கிற அளவுக்கு கவி மெள்ள மெள்ள எல்லோர் மனத்திலும் ஓர் ஆவல் உணர்ச்சியை தூண்டி விடுகிறான். கடைசியாக இராவணன் மாயங்கள் பயனற்று போனதை அறிந்து இராமன் மீது அம்பு விடுகிறான். ஆனால், இராமனின் அயன் படையோ இராவணனை மாய்க்கிறது,

இராவண வதத்திற்குப் பின் அண்ணனின் வரவு நோக்கிக் காத்திருக்கும் பரதனை நந்தி கிராமத்தில் பார்க்கிறோம். தீக்குளிக்கத் தயாராகும் அவனை ஐயன் “வந்தனன்!” என்ற அநுமனின் செய்தி, தடுக்கிறது.

அண்ணன் வருகிறான். முடிசூட்டு விழா நடக்கிறது. பின்னர் அனைவருக்கும் விடை கொடுத்தனுப்புகிறான் இராமன்.

துன்பம் நிலையானது அல்ல; அதற்கும் முடிவு உண்டு. அதனைத் தொடர்ந்து நிச்சயம் தீர்வு ஏற்பட்டு மன அமைதி ஏற்படும் என்ற பெரியதொரு தத்துவத்தைக் கூறுகிறது இக் காண்டம்.

எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற விரும்புவோர் இக்காண்டத்தைப் படித்தால், வெற்றிக்கு நிச்சயம் வழிகோலும்.

இல்லங்களில் உள்ள குழப்பங்கள் தீரும்; சச்சரவுகள் மறையும்.