பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

படைகளைக் கொண்டே துணித்து வீழ்த்திவிட்டு, போர் முடிந்தவுடன் இளையவனிடம் செல்கிறான்.

***


தோல்வியே அறியாத இராவணன் தோல்வி மேல் தோல்வி அடைந்து துவள்கிறான். எனினும் தேர் ஏறி போர் களம் செல்கிறான். பெரும் போர். அரக்கர் சேனை நிலை குலைகிறது. இராவணன் சீறி, வானர சேனையின் நிலையைக் கெடுக்கின்றான். லட்சுமணன் அநுமன் தோளின் மீது ஏறி இராவணனை எதிர்க்கிறான், இராவணனின் மோகனா அத்திரத்தை இலக்குவன் அனுப்பிய திருமால் படை ஒழிக்கிறது. இராவணன் தன் தம்பியைக் காண்கிறான். உடன் விபீடணன் மீது வெகுண்டு, அவன் மீது மயன் கொடுத்த வேலால் அவன்தன் உயிர்கொள்ள எண்ணி,

***


விட்ட போதினில் ஒருவனை
        வீட்டியே மீளும்
பட்ட போதவன் நான் முகன்
        ஆயினும் படுக்கும்
வட்ட வேலது வலங்கொடு
        வாங்கினன் வணங்கி
எட்ட நிற்கலாத் தம்பி மேல்
        வல் விசைத் தெறிந்தான்.

இந்த வேல் ஒருவனை அழித்தே திரும்பக் கூடியது. தாக்கப்பட்டவன் நான்முகன் ஆயினும் சரி, அவனையும் ஒழித்துக்கட்டக் கூடிய அவ் வேலை வணங்கி, விபீடணன்மீது வீசினான் வேகமாக, ஏன்? அவனைக் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தால்.

***