பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353


“தலைவன் இராமன் வந்தனன்; வாய்மையின் உருவான அவன் வரும்போது, நீ உயிர்விட்டால், அவன் மட்டும் வாழ்வனோ?” என்று உரக்கக் கூறிக்கொண்டே அப் பெருங்கூட்டத்தில் நுழைந்தான் வாயு மைந்தன். கையால் அத்தீயைப் பிசைந்து கரியாக்கினான்.

***

ஐயன் வந்தனன் - தலைவனாகிய இராமன் வந்தான்; ஆரியன் வந்தனன் - பெரியோன் வந்தான்; மெய்யின் மெய் அன்ன - வாய்மையின் உடல் போன்ற (வாய்மை வழுவாத) நின் உயிர் வீடினால் - உனது உயிர் போனால்; அவன் உய்யுமோ - அந்த இராமன் உயிர் வாழ்வானோ; என்று உரைத்து - என்று கூறி; உட்புகா - அந்தக் கூட்டத்தின் உள்ளே புகுந்து; கையினால் - தன் கைகளால்; எரியை - அத் தீயை; கரியாக்கினான் - அவித்துக் கரியாக்கினான்.

***

அத்துடன் இராமபிரான் பாரத்துவாச முனிவர் ஆசிரமத்தில் இருப்பதையும், கடிது வருவான் என்றும் கூறினான். அண்ணல் கொடுத்த மோதிரத்தைப் பரதனுக்குக் காட்டினான். பெரு மகிழ்ச்சி அடைந்தான் பரதன். அங்குள்ள யாவரும் மகிழ்ந்து ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.

பரதன் அநுமனைப் பாராட்டி, ‘நீ யார்?’ என்று கேட்டான். அநுமன் தன் வரலாற்றைக் கூறினான். ‘நான் இராமனின் அடிமை’. பின் தன் பேருருவத்தையும் காட்டினான். பார்த்தவர் அச்சமுற்றனர்.பரதனின் வேண்டுகோளுக்கிணங்க தன் சுய உருவு கொண்டான். பரதன் அவனுக்குப் பரிசளித்தான்.

பரதன் அயோத்தி நகரை அலங்கரிக்குமாறு கட்டளை இடுகிறான். நகரம் விழாக் கோலம் பூணுகிறது. பலரும் இராமபிரானை எதிர்கொண்டழைக்கச் செல்கின்றனர். மாருதியுடன், தாய்மார் மூவரும், பரதனும் செல்கின்றனர்.

கி,—26