பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

செய்தால்) உம் அன்னையும்-உமது தாயாகிய சீதாபிராட்டியும்;ஓகை கொணர்ந்து -மிக்க உவகைக்கொண்டு; இன்னல் குறை இல்லா சாகரம் முற்றும்; தாவிடும்- துன்பமாகிற குறைதலில்லாத (மிகப் பெரிய) கடல் முழுவதையும் கடந்து கரையேறுவாள்; என்று - என; விரிஞ்சன் மகன் - பிரம்மாவின் மகனான சாம்பவான்; விட்டான் - கூறி முடித்தான்.

***

சாம்பவன் கூறியதைக் கேட்டான் அநுமன். உற்சாகங் கொண்டான். சீதாபிராட்டியை தேடுவதற்கு இலங்கைச் செல்ல புறப்பட்டான். விறுவிறுவென மகேந்திர மலையை ஏறினான்.

***


மின்னெடுங் கொண்டல் றாளின்
        வீக்கிய கழலின் ஆர்ப்ப
தன் நெடுந் தோற்றம் வானோர்
        கட் புலத்து எல்லை தாவ
வல் நெடுஞ் சிகர கோடி மகேந்திர
        மண்டந் தாங்கும்
பொன் நெடுந்தூணின் பாத சிலையெனப்
        பொலிந்து நின்றான்.

மகேந்திர மலை மீது ஏறினான் அநுமன். வானின்று மண் வரை நீண்ட நெடிய விச்வரூபம் எடுத்தான். அப்பெரும் வடிவின் முன்,மிகப் பெரிய சிகரங்ளைக் கொண்டிருந்தாலும், மகேந்திர மலை மிகச் சிறியதாக தோன்றியதாம். தூணின் கீழ் வைக்கும் கல் எவ்வளவு சிறிதாகத் தோன்றுமோ அவ்வளவு சிறியதாக தோற்றம் அளித்ததாம், மகேந்திர மலை.

***