பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. கம்பன் பிறந்த ஊர்

மிழ்நாட்டின் சைவ வைணவச் சண்டை பிரசித்தம். கருது செம்பொன்னின் அம்பலத்திலே கடவுள் நின்று நடிக்கும். காவிரித் திரு நதியிலே கருணை மாமுகில்துயிலும் என்று ஒரே பாட்டிலே பாடத் தெரிந்த புலவர்களைப் படைத்திருந்தாலும், அந்த சிவன், அந்த விஷ்ணு அவர்களின் பக்தர்களுக்குள்ளே பூசல்களுக்குக் குறைவேயில்லை. திருவானைக்கா சைவர், ஸ்ரீரங்கத்துக் கோயில் மதில்மேல் மூக்கைத் தீட்டிய காக்கையைப் பார்த்து, ஓ! சைவ காக்கையே, சைவ காக்கையே, அப்படித்தான், இந்தப் பெருமாள் கோயிலை இடித்துத் தள்ளு என்று கூறின கதை நமக்குப் புதிதல்ல. அத்தோடு ஆலமுண்டான் எங்கள் நீலகண்டன் என்று சொன்ன சைவப் புலவனைப் பார்த்து, ஆம் அன்று ஆலமுண்டபோது எங்கள் பெருமாள் அந்த ஆலமுண்ட கண்டனையும் கூட உண்டான் என்றெல்லாம் ஒரு வைணவர் பேசினார் என்பதும் நாம் அறிந்ததே. இந்தப் பூசல் வளர்ந்திருக்கிறது தமிழ்நாட்டில் ஒரு காலத்தில். நம்முன்னோர் ஊர் தோறும் கோயில் கட்டினார்கள். ஈஸ்வரன் கோயில் எழுந்தது ஒரு புறம் என்றால் மற்றொருபுறம் பெருமாள் கோயிலும் எழுந்திருக்கிறது. என்றாலும் கோயில்களும் அடுத்தடுத்து இருக்காது. ஒன்றை ஒன்று ஒட்டியே இருக்கும்.