பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கம்பன் சுயசரிதம்

கீழவீதியும் ஒரே தெருதான். நிரம்பச் சொல்வானேன். திருவனந்தலிலிருந்து முக மலர்ந்து எழுந்திருந்தால் பெருமாள் சிவன் முகத்தில்தான் விழிக்க வேண்டும். சிவனும் அப்படியே. இப்படி அமைத்திருக்கிறார்கள் ஓர் ஊரில் சோழநாட்டில் அந்த ஊர் தான் அழுந்தூர். அந்த ஊர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்.

தமிழ்நாட்டில் கம்பன் தான் பிறக்க தக்கதொரு சிறு ஊரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறான். நல்ல சைவ குலத்திலே பிறந்தவன் கம்பன். இறை மிடற்று இறை, திங்கள் மேவும் செஞ்சடைத்தேவன், பாதி மதி சூடி என்றெல்லாம் இறைவனைப் பாடிப் பாராட்டத் தெரிந்தவன் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக அமைந்த ராமனை

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர்
     மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
     காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திரியு சங்கும்
     கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்
     விட்டு அயோத்தி வந்தான்


என்று பாராட்டத் தெரிந்தான் என்றால், அவனுக்கு ஒரு அருமையான காவியத்தை எழுத முனைந்தான் என்றால் அது இந்த ஸ்தலத்தின் மகிமை தானோ என்னவோ! இவ்வளவோடு நிற்கவில்லை. சிவன் பெரியவன் விஷ்ணு பெரியவன் என்று சண்டை போட்டுக் கொள்பவர்களுக்கு எல்லாம்

அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்
    என்று ரைக்கும் அறிவில்லார்

என்றெல்லாம் பட்டம் சூட்டி விடுகிறான். எவ்வளவு நல்ல சமரச பாவத்தை வளர்த்திருக்கிறான் கம்பன். அப்படி அவன்