பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கம்பன் சுயசரிதம்

அந்த திருமுகத்தில். இந்த மூலமூர்த்திக்கு முன்னாலேதான் பசு வந்து அணையப் பெற்ற ஆமருவி அப்பன் செப்புவிக்ரக உருவில் காட்சி கொடுப்பார். ஸ்ரீதேவி பூதேவி இருவரும் உடனிருப்பார்கள். மூவரும் ஆடை அணிகளால் தங்களை நன்றாக மூடி இருப்பார்கள். நகைகள் எல்லாம் ஒரே சிவப்புக் கல் மயம். இந்த நகைகளையோ உடைகளையோ களைவது பெருமாள் திருமேனியின் அழகை எல்லோரும் கண்டுவிட முடியாது. காணவிடமாட்டார்கள் அர்ச்சகர்கள். ஆனால் இந்த அர்ச்சகர்கள் முதுகுக்கும் மண்காட்டியவன் நான். ஆடி பதினெட்டில் ஆமருவியப்பன் காவேரிக்கு திருமஞ்சனத்திற்கு எழுந்தருளிய போது நானும் உடன் போனேன். அங்கு மறைந்திருந்து மேனியின் முழு அழகையும் கண்டு களித்தேன். சிற்பி அளவோடே பெருமாளுக்கு அணிகளை அணிவித்திருக்கிறார். நீண்டுயர்ந்த மணிமகுடம் தலையை அலங்கரிக்க சங்கு சக்ரதாரியாய் அபயஹஸ்தத்துடன் அழகாக நிற்கிறார். கையில் கதை வைத்திருக்கும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாம். இவனை ஆமருவி நின்ற மயக்கும் அமரர் கோமான் என்று பாடினாரே அந்தத் திருமங்கை மன்னன், அவனது எல்லைதான் என்ன.

கர்ப்பக் கிரகத்தில் இப்படியெல்லாம் ஊரைப் பற்றியும் கோயிலைச் சுற்றியும் புராண வரலாறுகள் பின்னிக் கிடக்கின்றன.

கோயிலை விட்டு வெளியே வந்து, தேர்வீதியில் நடந்தால் கீழ் விதியில் எண்ணிறந்த முஸ்லிம்கள் குடியிருப்பதைக் காண்பீர்கள். இந்த முஸ்லீம்கள் சைவ வைணவர் சண்டை ஈடுபடுகிறதில்லை. தமிழ்நாட்டின் கவிச்சக்கரவர்த்தி கம்பனை சைவ வைணவர்களுக்கு மாத்திரம் விட்டு விடுவதில்லை கம்பன் திருவிழாவிலே வந்து கலந்து கொள்வார்கள். கம்பரைப் புகழ்ந்து பாடுவார்கள். ஏன் கம்பன் கவிதையைப் பற்றிப் பேசும் முஸ்லீம் இளைஞர்களும் உண்டு என்றால் அதிசயிக்கத்தானே செய்வீர்கள்.