பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கம்பன் சுயசரிதம்


கொண்டு வந்தார். ஏதோ சரஸ்வதி மஹால் பண்டிதர்களில் ஒருவர் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரோ நான் இருக்கும் நாற்காலி பக்கமே வந்தார். எதிரே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு ஜம் என்று உட்கார்ந்து கொண்டார். இது என்னடா பூஜை வேளையில் கரடி என நினைத்தேன். ஆனால் வந்தவரோ, நல்ல கவர்ச்சியான உருவம் உடையவராயிருந்தார். கட்டுமஸ்தான உடல். ஆஜானு பாகுவான தோற்றம், அகன்று பரந்த நெற்றி, அடர்ந்து செறிந்த புருவம், அலட்சியமாக வாரிவிடப்படாத ஆக்ஸ்போர்ட்கிராப், செழித்து வளர்ந்த மீசை, கூர்ந்து நோக்கும் கண்கள், ரொம்பச் சொல்வானேன். அசப்பில் பார்த்தால் அமரர் டிகேசியே அங்கு ஒரு நடை வந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர் அணியும் துல்லிய கதராடை இல்லை. மடித்துத் தோளில் லாவகமாகப் போட்டிருக்கும் அங்கவஸ்திரமும் இல்லை. வந்தவர் அழகான ஒரு பொன்னாடையால் தன் உடலைப் போர்த்தியிருந்தார். காதுகளில் மகர குண்டலம். கழுத்திலோ நவரத்தின கண்டி, கைகளிலே வைர மோதிரங்கள் பளிச்சிட்டன. ஆளைப் பார்த்தாலே ருபாய் ஐம்பதினாயிரத்துக்கு ஜாமீன் கொடுக்கலாம்போல் இருந்தது. விழித்த கண் விழித்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன் சில நிமிஷ நேரம். அவரோ என்னைச் சும்மாவிடுபவராக இல்லை. பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

“என்ன ஐயா - சும்மா என்னையே பார்க்கிறே! என்ன படிக்கிறே! என்றார். இனி நடக்கிறது பேச்சு இருவருக்கும்

நான் - "இல்லை. சும்மாத்தான் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே" என்று.

வந்தவர் எங்கே என்னைப் பார்த்தே?

நான் - அதுதானே ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.