பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

கம்பன் சுயசரிதம்

கோபம். அப்படி கோபித்த நிலையில்தான் கிஷ்கிந்தை அரண்மனையில் நுழைகிறான். வானவர்கள் எல்லாம் நடுங்குகின்றனர். அமைச்சனான அனுமன் நினைக்கிறான். இலக்குவனது கோபம் தணிப்பதற்கு தாரை ஒருத்தியால்தான் முடியும் என்று. ஆதலால் அவளையே இலக்குவனை வரவேற்க அனுப்புகிறான். வான மகளிர் புடை ஆட தாரை வருகிறாள். அத்தனை பெண்களையும் ஒருங்கே கண்ட லக்ஷ்மணன் நாணுகிறான். மாமியர் குழுவில் வந்த மைந்தன் என நிற்கிறான். ஆனால் தாலியிழந்து மற்ற நகைகளும் அணியாது உடலை எல்லாம் நன்றாகப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தோடு வந்து நிற்கும் தாரையைக் கண்டவுடனே லக்ஷ்மணனுக்கு சித்ர கூடத்தில் கைம்மைக் கோலத்தில் வந்த தன் தாய்மார் நினைவு வருகிறது. ஆதலால் அவர்களை நினைந்து அப்படியே கண்ணிர் சிந்துகிறான். அதன்பின் தாரை தன் கணவனின் சகோதரன் சுக்ரீவன் இழைத்த பிழைக்காக வருந்திப் பேசுகிறாள். அதற்காக ராம லக்ஷ்மணர்களின் மன்னிப்பையே வேண்டுகின்றாள். இலக்குமணன் சீற்றம் தணிகிறான். அதன்பின்தான் அனுமன் வருகிறான். சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். கதை மேலே நடக்கிறது.

தாரையை நமக்கு அறிமுகப்படுத்துவது எல்லாம் இந்த மூன்று காட்சிகளில்தான். ஆனால் இந்தச் சிறு பாத்திர சிருஷ்டியை கம்பன் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறான் என்று தெரிய ஆதிகாவியம் வான்மீகர் காட்டிய தாரையையும் பார்க்க வேணும். பிலத்தினுள் வாலி மடிந்துவிட்டான் என்ற எண்ணத்தோடு சுக்ரீவன் நாடு திரும்பி மற்றைய வானரங்கள் விரும்பியபடி பட்டம் ஏற்றுக் கொண்டதுமே சுக்ரீவனது காதற் கிழத்தியாக தாரை அமைந்துவிடுகிறாள். அவள் சுக்ரீவனிடத்து இரண்டாவது மனைவியாக இருந்தனள் என்று வால்மீகத்தில் சொல்லப்படாவிட்டாலும் இரண்டு மூன்று இடங்களில் சொல்லாமல் சொல்கிறார். ராமனிடம் தனது கஷ்டங்களை