பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கம்பன் சுயசரிதம்

குறித்த தவணையில் வரவில்லை. ஆதலால், தன்னுடைய பிரதிக்ஞையின்படி தீ வளர்த்து அதில் குளித்துவிட தீர்மானித்துவிட்டான். சுற்றியுள்ளவர்களோ அவனைத் தடுக்கும் வகை தெரியாமல் மலைத்து நிற்கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் ராமன் அனுப்பிய தூதுவன் அனுமன் வந்து சேர்கிறான். ராமன் வந்து கொண்டிருக்கும் தகவலைத் தெரிவிக்கிறான். அவ்வளவுதான். பரதனது உள்ளத்தின் பாரம் நீங்கி, என்றும் இல்லாத ஒரு திருப்தி, களிப்பு, எக்களிப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்தக் களிவெறியில் அவன் செய்கிற காரியந்தான், வேதியரைத் தொழுவதும், தாதியரைத் தொழுவதும், தன்னையே தொழுவதும் என்றெல்லாம் விளக்கம் கூறினார்கள். காதல் வேகமும் கள்ளின் வெறியும் எப்படி எல்லாம் ஆளை ஆட்டுவிக்கும் என்று குறிப்பிட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல கவிதை என்றாலே எளிமையாகத்தான் இருக்கும். கவிதையில் எளிமை இருந்தாலே அது கம்பன் கவி என்றுதான் அர்த்தம், ஏன் எளிமை என்ற ஒன்றை வைத்தே கம்பன் கவியை இனம் கண்டுபிடித்து விடலாமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள். Good poetry is always simple; simplicity is the test of kamban; Kamban is the test of simplicity என்பதுதான் அவர்கள் ஆங்கிலத்தில் அன்று வைத்த முத்தாய்ப்பு.

இந்த வியாக்கியானத்தை நான் நினைக்கும்போதெல்லாம் தனிப்பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடல் இதுதான்.

காரென்று பேர்படைத்தாய்
    ககனத்து உறும்போது
நீரென்று பேர்படைத்தாய்
    நீள்நிலத்தில் வந்ததற்பின்
வாரொன்று மென்மயில்நேர்
    ஆய்ச்சியர்கை வந்ததற்பின்