பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கம்பன் சுயசரிதம்


நாடியிருப்பேனா. விந்தியமலை, விதர்ப்பநாடு, நர்மதை நதி, பம்பைப் பொய்கை எல்லாம் நான் கண்ணால் காணாதவைகள். சம்பிரதாயமாகச் சொன்னவைதான். (பின்னும் சொல்கிறார்) நான் பிறந்த நாட்டைச் சொன்னேனே. நான் வளர்ந்த ஊரைச் சொல்லவேண்டாமா? நான் வளர்ந்தது - வெண்ணெய்நல்லூர் அந்த ஊரிலே தான் என்னை வளர்த்த வள்ளல் சடையப்பர் இருந்தார். அவரையும் அவர் புகழையும் எத்தனையோ இடங்களில் என் காவியத்தில் பாடியிருக்கிறேன். பண்ணை வெண்ணெய்ச் சடையன் புகழ் எங்கும் பரவ வேண்டும் என்பது தான் காவியம் எழுதும்போதெல்லாம் என் உள்ளத்தெழுந்த ஆசை

நான் – (இடைமறித்து) சரி, அந்த வெண்ணெய்நல்லூர் எங்கிருக்கிறது ஐயா? இன்று கதிராமங்கலம் என்று அழைக்கப்படும் ஊர்தான் அந்த ஊர் என்கிறார்களே. அது சரிதானா?

கம்பன் – சரிதான் தம்பி! இன்று அதன் பெயர் கதிராமங்கலமா? அன்று மக்கள் அதற்குக் கொடுத்த பெயர் கதிர்வேய்மங்கலம். நான் இராம காதை பாடிக் கொண்டிருந்தபோது ஒருநாள் இரவு அகோர மழை பெய்ய, அந்த மழையில் நான் இருந்த வீடு ஒழுக, அதைக் கண்டு பொறாது சடையப்பர் பக்கத்திலிருந்த வயலில் முற்றி முதிர்ந்து கிடந்த கதிரை அறுத்து நானறியாமலேயே என் கூரையை வேய்ந்திருக்கிறார். இது தெரிந்தவர்கள் அதைக் கதிர்வேய்மங்கலம் என்றிருக்கிறார்கள். அங்குள்ள சடையன்திடல், கழுநீர்வயல் எல்லாம் அன்றைக்கு அவர் புகழுக்குச் சான்று பகர்ந்தன.

நான் – அன்றைக்கு என்ன? இன்றைக்கும் தான் அவை அதே பெயரில் நின்று நிலவுகின்றன. கழுநீர் வயல் என்றீர்களே அதைக்கூடத் தாங்கள்