பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

35


நான் – மன்னிக்கவேண்டும் ஐயா! மன்னிக்க வேண்டும். ஆறாத்துயரை ஆற்றும் ஆற்றல் இல்லாவிட்டாலும், அதைக் கிளராமலாவது இருந்திருக்கலாம். எல்லாம் என் அறியாமைதான்.

கம்பன் – பரவாயில்லை தம்பி! நான் விதியைப் பூரணமாக நம்புகிறவன் என்பதைத்தான் அறிவாயே. வெஞ்சின விதியினை வெல்வதற்கு ராமனாலேயே முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம், துதியறு பிறவியின் இன்பதுன்பந்தான் விதிவயம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

நான் – ஆம் ஐயா!

கம்பன் – நீயும் வேண்டுமென்றா இந்தக் கேள்விகளைக் கேட்கிறாய். எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையினால்தானே. அது கூட விதிதான்.

நான் – ஆம் ஐயா, நாங்கள் எல்லாம் கம்பன் கழகங்கள் நிறுவி ஏதோ உங்கள் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறோமே! நாங்கள் செய்வதெல்லாம் சரியா? இன்னும் என்ன செய்ய வேண்டும்? எது எது செய்யக்கூடாது?

கம்பன் – இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். அதையெல்லாம் கம்பன் கழகச் செயலாளர் சா. கணேசனிடம் கேட்டுக் கொள். ஒன்றே ஒன்று சொல்கிறேன். என் புகழ் பாட வேண்டாம். என்னைத் திட்டாமல் இருந்தால் சரி. வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும் செய்யாதீர்கள்.

இதுதான் என் விருப்பம்.

சரி சுவாமி என்று சொல்லி நான் என் இருப்பிடத்திலிருந்து எழுந்து அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதற்காகத் தலை குனிந்தேன். அவர் அப்படியே என் தலையில் கையை வைத்துத் தலையை நிமிர்த்தினார்.