பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கம்பன் சுயசரிதம்

ஆண்மையின் அழகைப் பெண்மையின் அழகு வென்று விடுகிறது என்று அர்த்தமா? பெண்ணே அழகுடையவள் என்று சொன்ன பெருமக்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் ஆண்மக்களே அல்லவா? பறவை இனத்தை எடுத்துக் கொண்டால், சேவல் கோழியைவிட அழகுடையதாக இருக்கிறது; ஆண் மயில் பெண் மயிலை விட அழகு வாய்ந்தது என்பதை மறுப்பவர் இல்லை. அதுபோலவே, மிருக உலகிலும், பசுவை விடக் காளையும், பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கமும் அழகுடையதாய் இருக்க, இந்த மக்கள் இனத்திலே மட்டும், பெண் எப்படி ஆணை விட அழகாய் இருந்துவிட முடியுமா? இது நியாயமான கேள்வி. ஆடவர் தங்கள் பலவீனத்தை மறைக்கவே இப்படி பெண்ணின் அழகை மிகைப்படுத்திக் கூறி இருக்கிறார்கள். இந்த ஆண்களில் ஒரு சிலராவது நெஞ்சில் உரம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘பெண்ணின் அழகெல்லாம் எண்ணிப் பிரித்திடில் பீழை சதை என்றே கண்டிடுவோம்; வண்ண மலரிடை வாய்ந்த வனப்பெலாம் வாடி வதங்குதல் யாமறிவோம்’ என்று ஒரு இளங்கவிஞர் துணிந்து கூறி ஆண்களின் மானத்தையே காத்திருக்கிறார்.

இன்னும் அழகு ஆராய்ச்சியில் பலர் செய்கிற தவறு ஒன்று. ‘ராஜா மக்கள் ரோஜா மலர் நிறம்’ என்பர். சிவந்த நிறம் உடையவர்களே அழகு உள்ளவர்கள், கருப்பு நிறம் என்றால் அழகே இல்லாதவர்கள் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம். இதிலே கூட அழகை ஆராதனை பண்ணுகிறவர்கள் தவறுதான் செய்கிறார்கள். மஞ்சள் கலந்த சிவப்பு கொஞ்சம் கவர்ச்சி உடையதே. அதற்காக செம்மேனி எம்மானையோ வெள்ளை வெளேரென்ற வெள்ளை நிறத்தவரையோ அழகுடையவர்கள் என்று சொல்லிவிடுதல் முற்றிலும் தவறு. குளிர்ச்சியில் ஒரு ருசி என்று கண்டவனே கருப்பில் ஒரு அழகு என்றும் சொல்லி மகிழ்ந்திருக்கிறான்.