பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

75


என்றே பாடுகிறான் கம்பன். அற்புதமான சீலமே உருவாகிவிடுகிறது. கம்பன் கண்ட ராமாயணத்தில் தசரதன் தன்னுடைய தந்தை மட்டுமல்ல. வீபிஷணனுக்கே தந்தை என்றல்லவா கூறுகிறான் ராமன். இந்த சகோதர தத்துவத்தையே விளக்க எழுந்த கதையாகவே, கம்பனது ராமாயணம் உருவாவதைப் பார்க்கிறோம். இந்தச் சகோதர உணர்ச்சியே கதை முழுவதும் வியாபித்து நிற்கிறது.

ராமன் சீலம் நிறைந்தவன் மட்டும் அல்ல. மக்களுள், நல்ல பிள்ளைக்கும், நல்ல கணவனுக்கும், நல்ல அரசனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் உத்தம புருஷனாகவும் இருக்கிறான். வயது முதிர்ந்த தந்தை, ‘இருளுடை உலகம் தாங்கும் இன்னலை’ இளவயதிலேயே ராமன் மீது ஏற்ற விரும்பிய போது அந்த அரச பதவியை விரும்பவும் இல்லை. இகழ்ந்து ஒதுக்கவும் இல்லை. ஆகவே கடன் என உணர்ந்து அரசன் என்ன பணி செய்யச் சொல்கின்றானோ அதனைச் செய்வதே நீதியும் தருமமும் என்று மிக்க அடக்கமாகவே ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மறுநாளே, மந்தரையின் சூழ்ச்சியால் மனம் மாறிய கைகேயிக்குக் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்பட்டு ‘காட்டுக்குப் போ’ என்று ராமனை, தந்தையும் தாயும் ஏவியபோதும், ‘தந்தை ஏவ, அதைத்தாய் உரைக்க இயைந்து என்னைவிடப் பிறந்த பயன் எய்தினவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்’ என்று அமைதியோடு ஏற்றுக் கொள்கிறான். இந்த நிலையில் கவிச்சக்கரவர்த்தி கம்பன், அந்த செப்பருங்குணத்து ராமன் திருமுகச் செவ்வியை நோக்குகிறான். அப்போதும், அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினையும் வென்று நிற்கும் முக அழகைக் கண்டு அப்படியே பரவசம் அடைகிறான், என்னே இவனது உள்ளத்தின் உயர்வு என்று. கோசலை, சுமித்திரை முதலிய தாயாரிடம் அவன் விடைபெறும் காட்சி, அவன் சிறந்த மகன் என்பதையே காட்டும். வள்ளுவன் சொன்னானே ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான்