பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

81

சொல்கிறான், அயன் அரன் என்ற தேவர் கூட்டத்தையே மானுடம் வென்றுவிடுகிறது என்று. இது மனிதனின் வெற்றியோ இல்லையோ? ராமன் ஓர் அவதார மூர்த்தி என்பதே கம்பனது எண்ணமாக இருந்திருக்கிறது. சுக்ரீவன் கூற்றாகக் கூறும் இந்த மூன்று பாடல்களின் மூலம் கம்பன் ராமனை எப்படிக் காண்கின்றான் என்ற உண்மையே தெற்றென விளங்கிவிடுகிறது. ராம கதை நாட்டில் வளர்ந்த விதமுமே, தெரிகிறது. நல்ல அழகனாக, சக்ரவர்த்தித் திருமகனாகப் பிறந்த ராமன் வான்மீகரது காவியத்திலே வீரனாக வளர்கிறான். கம்பனது ராமவதாரத்திலே ஓர் அவதார புருஷனாக உருக் கொள்கிறான். பின்னர் துளசிதாஸரது ராம சரித்திர மானசிலே அவதார மூர்த்தியாகவே ஆகிவிடுகிறான். எல்லோரும் வணங்கும் தெய்வமாகவே அவன் கருதப்படுகிறான்.

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களிலே, ராமாவதாரம் மிகச் சிறப்புடையது. தச அவதார தத்துவமே, உலகத்தின் பரிணாமத்தை விளக்க எழுந்ததுதானே. இறைவனும் உலகத்தோடேயே வளர்கிறான். முதன்முதல் நீரில் மாத்திரமே வாழக்கூடிய மீனாக அவதரிக்கிறான். பின்னர் நீரிலும் நிலத்திலும் வசிக்கக்கூடிய ஆமையாக, அதன்பின் நிலத்தினை உழுகின்ற வராகமாக உரு எடுக்கிறான். அதன்பின்னர் பாதி மிருகமும், பாதி மனிதனும் ஆன உருவில், அதன்பின் வளர்ச்சியுறாத மனித உருவிலும் தோன்றுகிறான். இப்படியெல்லாம் மீனாக, கூர்மம் ஆக, வராகமாக, நரசிங்கமாக, வாமனன் ஆக அவதரித்தவனே, நல்ல பூர்ணத்துவம் வாய்ந்த மனிதனாக, ஆம் ராமனாகவே அவதரிக்கிறான். மற்ற அவதாரங்களில் எல்லாம் காணாத நிறைவை ராமாவதாரத்திலே பெறுகிறான். இப்படித்தான் ராமனது அவதார மகிமை பேசப்படுகின்றது பக்தர்களால், பரம பாகவதர்களால்.

ராமன் அவதார மூர்த்தி என்பதைக் கம்பனும் உணர்ந்திருக்கிறான். அதை எத்தனையோ இடங்களில் எப்படி