பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கம்பன் சுயசரிதம்


ஏற்றினனா’ என்று அங்கலாய்த்தார். மூன்றாவது நபரும் சளைக்கவில்லை. ‘உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் தவிக்கும் வேளையில் கலை என்று கதைபேசித் திரிகின்றீர்; கவியென்றும் கம்பனென்றும் காலம் கழிப்பதற்குப் புவியில் இன்று நேரமில்லை புகல்கின்றேன் புகல்கின்றேன்’ என்று ஆவேசத்தோடு ஆடியே தீர்த்துவிட்டார். இந்த மூவருக்கும் அன்று நான் விடை சொல்லியிருக்கக்கூடும். ஆனால் வீண்வாதத்தை வளர்க்க விரும்பவில்லை. சரிதான் நீங்கள் சொல்வது என்று சிரித்து மழுப்பிவிட்டு அன்றிரவு வீடு திரும்பிவிட்டேன்.

ஆனால் வீடு திரும்பியபின், அதன்பின் பலநாளாக இந்த வாதங்கள் என் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டே இருந்தன. உண்மைதானே. கங்கைக் கரையிலே பிறந்த ராமகதை, காவேரி தீரத்தில் வந்து நிலைத்திருப்பானேன். வடநாட்டு ராமன் தென்னாட்டுத் தமிழர் இதயத்திலே இடம்பெறுவானேன். மனிதனாகப் பிறந்து மனிதனாகவே வாழ்ந்த அந்தச் சக்கரவர்த்தித் திருமகனை இங்குள்ளார் தெய்வமாக்கி, சிலை செய்து கும்பிட்டு வணங்குவானேன். இந்த அற்புதம் எல்லாம் நிகழ்வதற்கு மூலகாரணன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்தானே. காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, கலைமகள் அருளால் கருவிலேயே திருவினைப் பெற்ற கம்பன், ராமகதையை, ஆம், அந்த வான்மீகர் சொன்ன கதையைத் தான் கேட்டிருக்கிறான். அவர் உருவாக்கிய ராமனை அன்றைய சோழ மன்னர்களோடு ஒப்பிட்டு நோக்கியிருக்கிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழந்தமிழ்ப் பண்பிற்கேற்ப வடநாட்டு ராமனைத் தென்னாட்டு வீரனாக மாற்றியிருக்கிறான், அவ்வளவுதான். விடிந்தால், பொழுது போனால், ஒருவருக்கொருவர் ஏசலும், பூசலுமாக வாழ்ந்த மன்னர் மத்தியிலே வளர்ந்தவன் உள்ளத்தில், சொன்ன வாக்கை நிறைவேற்றுவதற்காகத் தன் அருமந்த மைந்தனையே காட்டிற்கு அனுப்புகிற தந்தை, தாய்