பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 101 உன் தந்தையாராகிய தசரதர் (திருமணக் காலத்தில் கன்னியா சுல்கமாகத்) தந்த மரபுபற்றி இத்தரணி நின்னதாய் இயைந்துள்ளது; நீ பிறந்துவிட்டமையின், உனக்கு உரிமையும் ஆகிவிட்டது. ஆதலால், இவ்வரசு உன்னுடையதே; ஆள்க, என்கிறான் அவ்வள்ளல். இக்கருத்தை விரிவாக வான்மீகரும் அயோத்தியா காண்டம், 107-ஆம் சருக்கம், 3-ஆம் சுலோகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:"உடன் பிறந்தவனே, முற்காலத்தில் உன் தாயாரை நம் பிதா மணஞ்செய்து கொண்ட பொழுது, உன் பாட்டனாரிடம் (கேகய ராஜனிடம்) அவர் பெண் வயிற்றுப் பேரனுக்காகத் தமது ராஜ்யத்தைக் கன்னியா சுல்கமாகப் பிரதிக்ஞை செய்து கொடுத்தார்.’’ (சோமசுந்தர பாரதியார்; தசரதன் குறையும் கைகே நிறையும், பக்கம், 19) . இதுவரை கூறியவற்றிலிருந்து இராமன் இவ் அயோத்தி அரசு பற்றிய சிக்கலை அறிந்திருந்தான் என்பது பெறப்படுகிறதன்றோ? இதனைத்தான் முற்கூறிய பாடலில் உள்ள கடன் இது என்று உணர்ந்தும்' என்ற அடிபொருளாகக் கொண்டுள்ளது, 'இராமன் இதனை அறிந்திருந்தும், தந்தைக்கு அறத்தை எடுத்துக் கூறாமல், அரசை ஏற்றுக்கொள்ளப் புகுந்தது முறையா?’ என்ற வினா எழலாம் அன்றோ? அதற்கு விடை தான் மூன்றாம் அடியிற் கவிஞன் தருகிறான். இராமனைப் பொறுத்தவரை தசரதன் அரசனாயும் தந்தையாயும் உள்ளான். தந்தையாய் இருந்து கேட்கும் பொழுது அவனுடன் வாதாடவும் கூடும். ஆனால், அரசனாய் இருந்து ஆணையிடும்பொழுது அது தவறாய் இருப்பினும் ஏற்று நடப்பதையன்றி வேறு வழி இல்லை. இவ்வாறுதான் இராகவன் நினைந்து நடந்தான் என்பதைக் கவிஞன் தான் பயன்படுத்தும் கொற்றவன், ஏவியது' என்ற இருசொற்களாலும் குறிக்கிறான்.