பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. நாடு



கோசலம் என்னும் கனவு

சங்கப் பாடலின் இயல்பு

தமிழ்ப் பெருங்கடலில் எண்ணற்ற முத்துக்கள் எடுக்கப் பெற்றுள்ளன.

கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் உள்ள இரண்டு நூற்றாண்டுகளாகிய சங்ககாலத்தில் சிறியவையும் பெரியவையுமான எண்ணற்ற முத்துக்கள் எடுபட்டதுண்டு.

அளவாற் சிறிய முத்துக்களைக் கோவை செய்து ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய நூல்கள் தொகுக்கப்பெற்றன. அளவாற் பெரிய முத்துக்கள் அகநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களாகத் தொகுக்கப்பெற்றன. இவ்வாறு தோன்றிய நூல்களை ஒரு காரணம் பற்றியே முத்துக்கள் என்று உருவகித்தோம். ஆழ்ந்தும், பரந்தும், ஓயாமல் அலை வீசியும் திகழும் கடலில் ஒருவன் மூழ்கி எடுக்கும் சிறந்த பொருளே முத்தாகும். அதேபோல உலகம் என்ற ஆழ்ந்த பெருங்கடலில், அன்றாட வாழ்க்கை அல்லல், போராட்டம் எனப்படும்