பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 அ. ச. ஞானசம்பந்தன்

 அலைகளின் நடுவே, உறுதி என்னும் துணைகொண்டு மூழ்கிக் கவிஞன் தன் அனுபவம் என்னும் முத்தைக் கொண்டு வருகிறான். சங்கப்பாடல்கள் என்று கூறப் பெறுபவை அனைத்தும் இவ்வாறு தோன்றியவையேயாகும். இப்பாடல்கள் பழந்தமிழரது அனுபவத்தின் ஆழத்தை உணர்த்துவனவே தவிர, அவ்வனுபவத்தின் அகலத்தை அல்லது பரப்பை வெளியிடுவன அல்ல. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கவிஞன் ஈடுபட்டு, அவனுடைய வாழ்க்கை முழுவதும் உடனிருந்து கண்டு கூறும் பரந்த அனுபவநிலை சங்கப் புலவர்கள் பாடலில் காண்பதற்கில்லை. அவ்வாறு அவர்கள் பாடியிருத்தல் கூடும். அந்நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

இளங்கோ அடிகள்

கவிஞன் தன் மனத்துள் ஆழச்சென்று அனுபவங் கண்டு கவிதை புனையும் இந்தச் சங்கப்பாடல் முறை முதன்முதலாக இளங்கோவடிகளால் மாற்றி அமைக்கப் பெறுகிறது. தமது சொந்த அனுபவம் ஒன்றிலேயே அமிழ்ந்து கவிதை புனையாமல், முதன் முதலில் அவர்தாம் மற்றவருடைய வாழ்க்கையில் புகுந்து பார்க்கிறார். கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய வாழ்க்கையில் ஈடுபட்ட கவிஞர், முற்றும் தம்மை மறந்துவிடுகின்றார்; அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் பின் செல்கிறார். இளங்கோவடிகள் தம்மையும், தம் சூழ்நிலையையும் மறந்துவிட்டுத் தம்மால் விரும்பப் பெற்ற கண்ணகி வாழ்வில் ஈடுபட்டதால், தமிழுக்கு ஒரு பெரிய நற்பேறு உண்டாயிற்று. அது வரையில் தமிழ் மொழி காணாத ஒரு புதுமுறைப் பாடல் தோன்றிற்று. காப்பியம் என்று கூறத்தக்க ஒரு புதுமுறைக் கவிதை, கவிஞன் பிறன் ஒருவனுடைய அனுபவத்தில் புகுந்து அவ்வனுபவத்தைத் தனதாக்கிக்கொண்டு கவிதை