பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 3




புனைந்த புதுமை, முதன் முதலாக இளங்கோவடிகளால் நமக்குக் கிடைத்தது.

அடிகளின் பின்னர்
உதிரியாய் உள்ள சங்கப்பாடல் தொகுப்புக்களில் இல்லாத புதுமை, அழகு, பரந்துபட்ட தன்மை என்னும் இவை எல்லாம் இப்புதுமுறைக் கவிதையில் காண முடிந்தது. இளங்கோவடிகள் வழியிலேயே அவர் பின் வந்த சாத்தனார் ‘மணிமேகலை’யை இயற்றினார். அதைத் தொடர்ந்து சில நூற்றாண்டுகள் கழித்துக் கொங்குவேள் என்பார் ‘உதயணன் சரிதை’யைக் காப்பியமாக இயற்றினார். ஒன்பதாவது நூற்றாண்டில் கம்பனது ‘இராமாயணம்’ பிறந்தது. பத்தாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரின் ‘சிந்தாமணி’ யும் தோலாமொழித் தேவரின் ‘சூளாமணி’யும் உதயமாயின. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் வெளி வந்தது. இக்காப்பியங்களைக் கற்றவர்கள், எவ்வாறு இவை ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி முன்னர்த் தோன்றியவற்றின் அனுபவத்தைப் பின்னர்த் தோன்றி யவை பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பதை அறிய முடியும். கம்பநாடன் தனக்கு முன்னர்த்தோன்றிய காப்பியங்களையும் சங்க நூல்களையும் நன்கு பயன்படுத்திக் கொண்டான். அவனுக்கு முன்னர்ப் பல காப்பியங்கள் தோன்றிவிட்டமையின், அவனது காப்பியம் அவை அனைத்தின் சிறப்பையும் பெற்று, மேற்கொண்டு அவனது தனிக் கற்பனையின் சிறப்பையும் கொண்டு விளங்குகிறது. முன்னர்த் தோன்றியவற்றின் சிறப்பை எல்லாம் சிரணித்துத் தனதாக்கிக் கொண்டமையின், அனைத்தும் அவனுடைய புது மெருகுடன் விளங்கக் காண்கிறோம். எனவே, அவனது காப்பியம் இனிப்பது போலப் பிற காப்பியங்கள் சுவை பயப்பதில்லை. பிற்காலப் புலவர் “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கு இதயம் களியாதே”, என்று கூறினது முற்றும் பொருத்தமுடையதேயாகும்.