பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 5




இருக்குமா? இதோ அங்கு நாட்டியம் நடைபெறுகிறது! வாருங்கள் கண்டு களிக்கலாம்:

நாட்டியம் நடைபெறுவதற்குரிய அரங்கமும் விளக்கு வசதிகளும் இருந்தாலன்றி, நல்ல முறையில் அதனை அனுபவிக்க முடியாதன்றோ? நல்ல வயற்புறமே அரங்கமாய் அமைகின்றது. நீர் அலைகள், தொங்க விடப்பட்ட திரைகளாய் விளங்குகின்றன. செந்தாமரை மொட்டுக்கள் தீவர்த்தி பிடித்தாற்போலச் சூழ்ந்து நிற்கின்றன. பின்னணி இசை இதோ தொடங்குகிறது! மேகங்கள் கூடி மத்தளத்தின் சுதி கூட்டிவிட்டன. யாழ் வாசிக்கின்றனவே வண்டுகள், அது காதில் விழுகிறதா? இந்தப் பின்னணி இசையில் இதோ நாட்டியம் ஆடும் நங்கையாகிய மயில் வந்து ஆடத் தொடங்கிவிட்டது! எவ்வளவு சிறந்த நாட்டியக்காரர்களாயினும், ஆட்டத்தைக் கண்டு களிப்பவர்கள் இல்லையாயின், நன்கு ஆடல் இயலாது. எனவே, மயிலின் இந்த ஆட்டத்தைக் காண்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக் கணக்கான கண்கள் ஏக காலத்தில் காண்பன போலக் குவளை மலர்கள் வியந்து நோக்குகின்றன. இந்த முறையில் மேகங்களும் வண்டுகளும் பின்னியம் இயம்ப, தாமரை மொட்டுக்கள் விளக்கு வசதி செய்து தர, குவளை மலர்கள் நாட்டியத்தை விழித்த கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, மயில் நாட்டியம் ஆட, எதிரே கொலுவீற்றிருக்கும் அரசி மருத நாச்சியார் இக் காட்சியைக் கண்டு களிக்கிறாள். பாடலை இனிப் பாருங்கள்:

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்துநோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ!

(கம்பன்-35)